'ஆன்லைன் கடன் அலெர்ட்' கடன் தருவதாக கூறி பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்த ஊழியர்

'ஆன்லைன் கடன் அலெர்ட்' கடன் தருவதாக கூறி பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்த ஊழியர்
'ஆன்லைன் கடன் அலெர்ட்' கடன் தருவதாக கூறி பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்த ஊழியர்

சென்னை அம்பத்தூரை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடன் தருவதாக தொலைபேசி மூலம் பேசி, அவரிடமிருந்து புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக் கொண்டு மோசடி செய்ய முயற்சித்துள்ளது ஒரு கும்பல். குறிப்பாக அப்பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து அவரை அவர்கள் தற்கொலைக்கு தூண்டியுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூரை அடுத்த மாதனாங்குப்பம், நேதாஜி தெருவை சேர்ந்த பெண்ணொருவர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு தனியார் கடனளிக்கும் நிறுவன (INSTANT LOAN APP) ஊழியர், `உங்களுக்கு கடன் வேண்டுமா?’ எனக் கேட்டு உள்ளார். அதற்கு அவரும் தனக்கு ரூ.30 ஆயிரம் பணம் கடனாக தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து அவர், அவரின் அடையாள அட்டை, புகைப்படம் ஆகியவற்றை வாட்சாப் மூலம் தங்களது கைப்பேசி எண்ணுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டு உள்ளனர். அவரும் அதை நம்பி மேற்கண்ட ஆவணங்களை அனுப்பி உள்ளார். இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை கடன் கொடுக்கும் நிறுவனத்திலிருந்து அப்பெண்ணின் கைபேசியில் தொடர்பு கொண்டு, உங்களுக்கு கடன் தொகை தயாராகி விட்டது. அதற்கு முன் பணமாக ரூ. 3ஆயிரம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனை ஏற்றுகொள்ளாத அவர், தனக்கு ஏற்கெனவே பண கஷ்டம் இருப்பதால் தான் கடன் கேட்பதாக விளக்கி `என்னால் பணமெல்லாம் கட்ட முடியாது’ எனக் கூறி தொடர்பை துண்டித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து மறுதினமான கடந்த சனிக்கிழமை மாலை அப்பெண்ணின் புகைப்படத்தை தவறான முறையில் சித்தரித்து அவரது வாட்ஸ் அப்பிற்கும், அவருக்கு தெரிந்தவர்களுக்கும் சிலர் அனுப்பியுள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த அப்பெண்மணி அம்பத்தூர் பஸ் நிலையத்தில் அளவுக்கு அதிகமான வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, புகைப்படத்தை சித்தரித்து அனுப்பிய தனியார் நிறுவன ஊழியர்களை தேடி வருகின்றனர். கணவனை இழந்து இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் தூய்மை பணியாளர் பெண் ஒருவரின் வறுமையை பயன்படுத்தி கடன் தருவதாக மோசடி செய்ய முயறச்சித்ததோடு, அவரின் புகைப்படத்தை தவறாக சித்தரத்து தற்கொலைக்கு தூண்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com