ஆம்பூர்: பிரியாணி கடையை உடைத்து பணம், சிசிடிவி கேமரா கொள்ளை - ஒருவர் கைது
ஆம்பூரில் பிரியாணி கடையை உடைத்து பணம் மற்றும் சிசிடிவி கேமராக்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையம் அருகே ஆம்பூர் பிரியாணி என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வருபவர் பயாஸ் அஹமத். இவர், கடந்த 11.01.2021 அன்று இரவு 10 மணிக்கு இரவு ஊரடங்கு இருப்பதால் உணவாக வியாபாரத்தை முடித்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் 12.01.2022 காலை உணவகத்தை திறந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் உணவகம் முழுவதும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஹார்ட் டிஸ்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றிருந்தனர.
சம்பவம் குறித்து பயாஸ் அஹ்மத் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேசிய நெடுஞ்சாலை முழுவதும் காவல்துறையினர் வைத்துள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் மற்றும் அருகில் உள்ள கடைகளில் உள்ள கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கேமராவில் பதிவாகியிருந்த நபர் குறித்து விசாரணை செய்தபோது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முரளி என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரியாணி கடையில் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

