ஏற்கனவே 2 திருமணம்.. ரூ.14 லட்சத்துடன் கணவர் எஸ்கேப்.. மேட்ரிமோனி வரனால் கண்ணீருடன் பெண் புகார்!

மேட்ரிமோனியில் பார்த்து 2வது திருமணம் செய்த கணவனுக்கு ஏற்கனவே 2 திருமணம் நடந்துள்ளதாகவும், 14 லட்சம் ரூபாயை சுருட்டிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் திருப்பதியைச் சேர்ந்த ரம்யா.
matrimonial fraud
matrimonial fraudfile image

ஆந்திரா மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் ரம்யா(38). இவர் தனது கணவர் குமாரசாமி இறந்ததை அடுத்து, மகளின் பாதுகாப்பிற்காக 2வது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். குமாரசாமி 2020ம் ஆண்டு இறந்த நிலையில், மேட்ரிமோனி மூலம் வரன் தேடிய ரம்யா, வினோத்குமார் என்பவரை மணம் முடிக்க திட்டமிட்டுள்ளார்.

அப்போது, விதவை பெண்ணை மணம் முடித்து வாழ்வு கொடுப்பதாகவும், சமூக சீர் திருத்தத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார் வினோத்குமார்.

இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் 2021ம் ஆண்டு திருமணமும் நடக்க, 50 சவரன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்களை சீதனமாக பெற்றுள்ளார் வினோத்குமார். தொடர்ந்து, தான் வேலூரில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்வதாக கூறி ரம்யாவை வேலூர் அடுத்த அரியூர் பகுதியில் வாடகை வீடு எடுத்து குடிவைத்திருக்கிறார்.

தங்களது பெண் குழந்தையை நன்றாக படிக்க வைக்க வேண்டும், சொந்தமாக மனை வாங்கி வீடுகட்டலாம் என்று கூறி ரம்யாவிடம் இருந்து 14 லட்சம் ரூபாயை பெற்ற வினோத், மொத்த பணத்தையும் குடித்தே அழித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இருவருக்கிடையில் பிரச்சனை எழ, ரம்யாவை அடித்து துன்புறுத்தி தனியறையில் பூட்டிவிட்டு தப்பியுள்ளார் வினோத்குமார். இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்க 100க்கு அழைத்து பேசிய ரம்யாவுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது. வினோத் இவ்வாறு ஏமாற்றிவிட்டதாக புகார் அளிக்க சென்ற ரம்யாவிடம், அவருக்கு ஏற்கனவே 2 திருமணம் நடந்ததையும், முதல் மனைவிக்கு 18 வயதில் மகன், 2வது மனைவி இறந்துவிட்ட தகவலையும் போலீஸார் கூறியுள்ளனர்.

மேலும், ரம்யாவிடம் இருந்து வாங்கிய பணத்தில் முதல் மனைவியின் மகனுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பில் விலை உயர்ந்த பைக் வாங்கி கொடுத்ததும், லட்சக் கணக்கில் பணத்தை கொடுத்து பல பெண்களோடு தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில், வினோத்திடம் இருந்து ரூ. 14 லட்சம் பணத்தையும், 50 சவரன் தங்க நகைகளையும் 4 கிலோ வெள்ளி பொருட்களையும், விலை உயர்ந்த காரையும் பெற்றுத்தந்து, வினோத் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமியிடம் ரம்யா மனு கொடுத்துள்ளார்.

மகளின் பாதுகாப்புக்காக மேட்ரிமோனியில் வரன் பார்த்த பெண்ணுக்கு நடந்த இந்த சம்பவம் இணையத்தில் வரன் தேடுவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com