குறைந்த வட்டிக்கு கடன் வாங்கித் தருவதாக தொலைபேசி அழைப்பு: நூதன மோசடி
குறைந்த வட்டிக்கு கடன் வாங்கித்தருவதாக தொலைபேசி அழைப்புகள் உங்களுக்கும் வந்திருக்கக்கூடும். இதுபோன்ற அழைப்புகள் மூலம் ஈர்த்து, போலியாக ஆயுள்காப்பீட்டு நிறுவனம் நடத்திய நூதன மோசடி சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
பொதுமக்கள் இதுபோன்ற மோசடி நபர்களிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த 3 பேர் போலி இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி பணமோசடியில் ஈடுபட்டு கைதாகி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதாகி உள்ள கமல்ராஜ், மணிகண்டன், கவியரசன் ஆகியோர் மீது பட்டினப்பாக்கம் போலீசார் மோசடி வழக்கை பதிவு செய்துள்ளனர். இவர்கள் அண்ணாசாலையில் தனியார் வணிக வளாகத்தில் போலியாக ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தை நடத்தி வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைதாகி உள்ள 3 பேரும் வடபழனியில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவத்தில் போலி நிறுவனத்தை நடத்தியுள்ளனர். இதுபோன்ற மோசடி தொலைபேசி அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் இருந்து 66 ஆயிரம் ரூபாய் பணம், 5 செல்போன்கள், பைக் ஆகியவற்றை பட்டினப்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்தனர்.