துபாய் -சென்னை: விமானத்தில் கடத்திவரப்பட்ட 9.03 கிலோ தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 9.03 கிலோ எடையுள்ள தங்கத்தை விமான சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் துபாயிலிருந்து வந்த பயணியிடம் இருந்து 60 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டது. விமான நிலையத்தின் கழிவறை வழியே தங்கக்கட்டிகள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வந்த விமானத்தில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டது. விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பின் விமானத்திற்குள் ஏறிய சுங்கத்துறை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
விமான இருக்கைக்கு அடியில் சோதனை செய்தபோது எதுவும் கிடைக்கவில்லை. பின்னர், விமான கழிவறையில் சோதனை செய்தனர். அப்போது கழிவறையில் இருந்த பெட்டிக்குள் பார்சல் இருந்ததைக் கண்டனர். அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. அதேபோல, சா்வதேச விமான வருகை பகுதியில் உள்ள கழிவறையில் ஒரு மர்ம பார்சலை பார்த்த விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்தபோது அதிலும் தங்கம் இருந்ததைக் கண்டனர்.
ஒரே நாளில் சுங்கத்துறை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் விமான நிலைய கழிவறையில் இருந்து ரூ. 4 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். விமான நிலையத்தில் சுங்கத்துறை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருவதால் துபாயில் இருந்து தங்கத்தைக் கடத்தி வந்த கும்பல் விமான கழிவறை மற்றும் விமான நிலைய கழிவறையில் வைத்துவிட்டு சென்றதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தங்கத்தை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.