கோவை: நோயாளிகளிடம் கட்டாயப்படுத்தி பணம் வசூலித்த பணியாளர்கள் மீது நடவடிக்கை
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகளிடம் கட்டாயப்படுத்தி பணம் வசூல் செய்ததாக எழுந்த புகாரில் மருத்துவ பணியாளர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், தனது உறவினரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அனுமதிக்கப்பட்ட அந்த நபரை அறுவை சிகிச்சை பிரிவிலிருந்து வார்டுக்கு அழைத்துச்செல்ல, மருத்துவ பணியாளர்கள் சுரேஷிடம் 500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்படி சுரேஷிடமும் பணம் கேட்கப்பட்டபோது, அவர் `பணம் இல்லை. வேண்டுமானால் 100 ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்’ எனக் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு அந்த மருத்துவ பணியாளர்கள் `அறுவைசிகிச்சை அறையில் இருக்கும் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும். அதனால் 500 ரூபாய் கொடுத்தால் மட்டுமே வார்டுக்கு நோயாளியை அழைத்துச் செல்வோம்’ எனக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அருகில் இருந்த மற்றொரு நோயாளியிடம் பணம் கடனாக வாங்கிக் கொடுத்துள்ளார் சுரேஷ். இது தொடர்பாக மருத்துவமனை டீன் ரவீந்தரனிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், புகாரின் அடிப்படையில் அவர் விசாரணை நடத்தியிருக்கிறார். அதன்முடிவில் ஒப்பந்த பணியாளர்கள் 4 பேரையும் பணியிலிருந்து நீக்கி, மேலும் 12 பேரை கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பணியிடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறார் டீன் ரவிந்தரன்.