ஏம்பல் சிறுமி கொலை வழக்கு : கைது செய்யப்பட்டவர் தப்பி ஓட்டம்
ஏம்பல் அருகே சிறுமியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பி ஓடியுள்ளார்.
அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாகூரான்-செல்வி தம்பதி. இவர்களது 7வயது மகள் கடந்த ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் இரவு 7 மணி வரை வீட்டிற்கு வரவில்லை. ஆகவே பெற்றோர்கள் அவரை தேடிப்பார்த்துள்ளனர். ஆனால், எங்கு தேடியும் அவர்களது மகள் கிடைக்கவில்லை. அதனையடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் தன்னுடைய மகளை காணவில்லை என்று புகார் அளித்திருந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே சிறுமியின் வீட்டின் பின்னால் 200 மீட்டர் தொலைவில் உள்ள தண்ணீர் இல்லாத செடிகள் அடர்ந்த குளத்தில் சிறுமி ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சிறுமியின் பக்கத்து வீட்டு நபரான ராஜா(26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், ராஜாவை காவல்துறையினர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது கைவிலங்கை உருவிக்கொண்டு ராஜா தப்பி ஓடியுள்ளார். தப்பி ஓடிய கைதி ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை எஸ்பி பாலாஜி சரவணன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “குற்றவாளியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் குற்றவாளியை விரைந்து தேடி வருகின்றனர். விரைவில் தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடித்து விடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.