சென்னை: சுமார் 1.25 லட்சம் பேரிடம் 10,000 கோடி வரை மோசடி... தந்தை மகன் தலைமறைவு!

சென்னை: சுமார் 1.25 லட்சம் பேரிடம் 10,000 கோடி வரை மோசடி... தந்தை மகன் தலைமறைவு!
சென்னை: சுமார் 1.25 லட்சம் பேரிடம் 10,000 கோடி வரை மோசடி... தந்தை மகன் தலைமறைவு!

துபாய் முதலிய வெளிநாடுகளில் எண்ணெய் கிணறுகளில் முதலீடு செய்தால், பண வரவு கிடைக்கும் என மோசடி செய்து சுமார் 10,000 கோடி ரூபாய் பணத்தை சுருட்டிவிட்டு, சென்னையை சேர்ந்த தந்தை மகன் தலைமறைவாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துபாய், மலேசியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் எண்ணெய் கிணறுகளில் முதலீடு செய்தால், ஒரு லட்ச ரூபாய்க்கு 15 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக அறிவித்து, மக்களின் பணத்தாசையை தூண்டி, சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் பணத்தை சுருட்டி விட்டு, சென்னையை சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவரும், அவரது மகன் அலெக்சாண்டர் என்பவரும் தலைமறைவாக உள்ளனர்.

இந்நிலையில் அவர்களது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் கடியாப்பட்டியில், அவர்களை குறித்து விசாரித்த போது, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே சௌந்தர்ராஜன் சென்னை சென்று விட்டதாகவும், சொந்த ஊரில் எந்தவித பொருளாதார பின்புறமும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் சென்னைக்கு சென்றபின் பல்வேறு மோசடிகள் செய்து, அதன் மூலம் கிடைத்த பணத்தில் சொந்த ஊரில் பல கோடி ரூபாய் மதிப்பில் கோயில் ஒன்றை கட்டியுள்ளதும், ரிசார்ட் போன்ற அமைந்திருக்கும் அந்த கோயிலுக்கு முதலீட்டாளர்களை அழைத்து வந்து ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாபட்டியை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். எந்தவித பொருளாதார பின்புலமும் இல்லாத எளிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்து, பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு பொருள் ஈட்டியுள்ளார். முதலில் சிறிது சிறிதாக மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சௌந்தர்ராஜன், தற்போது அவரது மகன் அலெக்சாண்டருடன் சேர்ந்து பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

ஹிஜாயு (HIJAU) என்ற எண்ணெய் நிறுவனம் நடத்தி மோசடி!

சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வரக்கூடிய இவர்கள், ஹிஜாயு (HIJAU) என்ற எண்ணெய் நிறுவனம் நடத்தி துபாய், மலேசியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் எண்ணெய் நிறுவனங்களில் ‘முதலீடு செய்வதற்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், அதற்கு வட்டியாக மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்று நம்பிக்கை தெரிவித்து, அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். இதில் முதலீடு செய்ய வருபவர்களுக்கு பல்வேறு விதமான நம்பிக்கை வாக்குறுதிகளை கொடுத்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் நேரடியாக சவுந்தர்ராஜன் மற்றும் அவரது மகன் அலெக்ஸாண்டர் இதில் தலையிடாமல் போர்டு மெம்பர் என்ற அடிப்படையில் முதலில் வந்த 21 முதலீட்டாளர்களை வைத்து மற்ற முதலீட்டாளர்களிடம் பணம் வசூல் செய்து வந்துள்ளனர்.

முதலீட்டாளர்களையே வைத்து காய் நகர்த்தி, அவர்களது குடும்பத்தினரையும் சிக்கவைத்துள்ளனர்!

இவர்களின் அறிவிப்பை நம்பி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் முதலீட்டாளர்கள், தங்களது முதலீடுகளை கொடுத்து வந்த நிலையில், கடந்த இரண்டரை ஆண்டு காலமாக முதலீட்டாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு அவர்கள் கூறியபடி வட்டித் தொகை கொடுத்து வந்துள்ளனர்.

மேலும் இதில் முதலீடு செய்தவர்களிடம் ஆசை வார்த்தை கூறி வட்டியாக கொடுத்த தொகையையும் இந்த நிறுவனத்திலேயே முதலீடு செய்ய வைத்துள்ளனர். மேலும் முதலீட்டாளர்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டவர்களையும் இதில் முதலீடு செய்ய வைத்தால், அதற்கு தனியாக கமிஷன் தொகையையும் கொடுத்து வந்துள்ளனர்.

பொதுசேவை செய்தும், கோவில் கட்டியும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளனர்!

அதுமட்டுமில்லாமல் முதலீட்டாளர்களுக்கு இந்த நிறுவனத்தின் மீது நம்பகத்தன்மை ஏற்படுத்த, முதலமைச்சருக்கு கொரோனா நிவாரண நிதி வழங்குதல், பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்களை வைத்து மக்கள் சேவை செய்வது போல காட்டுவதற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சேவைகளை தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு கட்ட மக்கள் பணியையும் செய்வது போல் காட்டியுள்ளனர்.

மேலும் சௌந்தர்ராஜன் மற்றும் அலெக்ஸாண்டர் ஆகியோரின் சொந்த ஊரான கடியாபட்டியில் பல கோடி மதிப்பீட்டில், காமதேனு பாபா திருக்கோயில் என்ற கோயிலை பெரிய ரிசார்ட் போல் முதலீட்டாளர்களின் பணத்திலேயே கட்டி, முதலீடு செய்தவர்களையும் அந்த கோயிலுக்கு அழைத்துச் சென்று நம்பகத் தன்மையை விதைத்துள்ளனர்.

1.25 லட்சம் பேர்களிடம் 10ஆயிரம் கோடி வரை மோசடி!

இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை‌ ஏற்பட்ட நிலையில், இரண்டரை ஆண்டுகளில் 1.25 லட்சம் பேர், சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் வரையிலான முதலீட்டை செய்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கடந்த 10 மாத காலத்தில் இதில் முதலீடு செய்தவர்களுக்கு எந்தவித தொகையையும் வழங்காமல் ‘மொத்தமாக லாபத் தொகையை பங்கிட்டு தருகிறோம்.அதனால் அதிகப்படியான பங்குகளை செலுத்துங்கள்’ என்று மீண்டும் அனைவரையும் நம்ப வைத்து, அதிக முதலீட்டை செலுத்தவைத்துள்ளனர். அதனை பெற்றுகொண்ட நிலையில், கடந்த 6 மாத காலமாக ‘இன்று பங்கு தொகை வந்துவிடும், நாளை வந்துவிடும்’ என்று நாட்களை கடத்தி வந்துள்ளனர்.

தந்தை சவுந்தர்ராஜன், மகன் அலெக்சாண்டர் இருவரும் தலைமறைவு!

இறுதியாக கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதிக்குள் மொத்த தொகையையும் முதலீட்டாளர்களுக்கு செலுத்தி விடுவோம் என்று தெரிவித்த இந்த நிறுவனத்தினர், அதன்பிறகு யாரையும் தொடர்பு கொள்ளாமல் தங்களது மொபைல் ஃபோன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள், சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில், சௌந்தரராஜன் மற்றும் அவரது மகன் அலெக்சாண்டர் ஆகிய இருவர் மீதும் புகார் தெரிவித்திருந்தனர். தற்போது காடியாபட்டி கிராமத்தில் பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கோயிலும், அவரது தாயார் வசிக்கும் ஒரு வீடும் மட்டுமே உள்ளது.

இதுகுறித்து அந்த கிராம மக்களிடம் விசாரிக்கும் போது, சௌந்தரராஜன் 30 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை சென்று விட்டு அடிக்கடி அங்கு பலரிடம் மோசடி செய்துவிட்டு பின்னர் ஊர் திரும்புவார் என்றும், பின்பு அதுகுறித்த பஞ்சாயத்துக்கள் நடைபெறும் என்றும், இப்படி மோசடியிலேயே வாழ்வை தொடங்கிய சௌந்தர்ராஜன் தற்போது தனது மகனுடன் இணைந்து ஹைடெக் முறையில் பத்தாயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தங்களுக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com