லிப்ட் கேட்ட மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி - இளைஞர் கைது
ஆலங்குடி அருகே 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 21 வயது இளைஞரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரசடிப்பட்டி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி மாரியம்மாள். இவர், நேற்று அவ்வழியாகச் சென்ற எஸ்.களபம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் முருகானந்தம் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் அந்த இளைஞர் மூதாட்டியை காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று கத்தியை காட்டி மிரட்டி கத்தியால் குத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த கிராமத்தினர் திரண்டதால் மூதாட்டியை அங்கேயே விட்டுவிட்டு முருகானந்தம் தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து அந்த கிராமத்தினர் மூதாட்டியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து புகாரின் அடிப்படையில் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர் தப்பியோடிய முருகானந்தத்தை கைது செய்து ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் ஆலங்குடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.