‘என் கண் எதிரிலேயே கொன்னுட்டான்களே’ கதறும் கணவர்!
ஓடும் இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை திருடர்கள் பறித்தபோது, தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்தவமனை ஆய்வாளராக பணிபுரிந்தவர் மல்லிகா (55). இவர் கடந்த மாதம் 20ஆம் தேதி அன்று பணி முடிந்து, தனது கணவர் வீராசாமியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். பானாவரம் அடுத்த மாங்குப்பம் தைலமரத் தோப்பு அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இருவா் மல்லிகா அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மல்லிகாவிற்கு, பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் இருந்த அவரை அந்த வழியாக வந்த தனியார் நிறுவன ஊழியர்களின் உதவியுடன் பாணாவரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார் வீராசாமி. பின்னர் மேல் சிகிச்சைக்காக மல்லிகாவை வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும், சிகிச்சை பலனின்றி மல்லிகா உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த அவரின் கணவர் வீராசாமி, ‘என் கண் எதிரிலேயே கொன்னுட்டாங்களே. அந்த திருடன்கள விடக் கூடாது’ எனக் கதறி அழுதார். இச்சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இதுதொடர்பாக பானாவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனண நடத்தி வந்தனர். இந்நிலையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய காவல் துறையினர், சங்கிலிப்பறிப்பில் ஈடுபட்ட மகேந்திரன், காத்தவராயன் உள்ளிட்ட 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.