”பார்சல் வேணுமா பணம் கட்டுங்க” - முகநூலில் பழக்கம்.. திட்டமிட்ட மோசடி; 22 லட்சத்தை இழந்த குமரி பெண்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பெண்ணிடம் 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை குமரி மாவட்ட போலீசார் கைது செய்தனர்.
ஃபேஸ்புக் மூலம் மோசடி
ஃபேஸ்புக் மூலம் மோசடிPT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் ஃபேஸ்புக் மூலம் பழகிய நபர் ஒருவர், தனக்கு விலை மதிப்புமிக்க பரிசு பொருள்களை பார்சலில் அனுப்பி தருவதாக கூறி சுமார் 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்திருந்தார்.

நடந்தது என்ன?

முகநூலில் பழக்கமான நபருடன் மிகவும் நட்பாக அந்தப் பெண் பழகி வந்துள்ளார். இதனிடையே, அந்தப் பெண்ணிற்கு பரிசளிப்பதற்காக தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வாங்கியுள்ளதாகவும் அதனை பார்சலில் அனுப்பி வைப்பதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். அதனை நம்ப வைப்பதற்காக வீடியோ காலில் பொருட்களை வாங்குவது போல் செய்துள்ளார். இந்த பார்சல் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து அங்கிருந்து கொரியர் மூலம் வீட்டிற்கு வரும் என கூறியுள்ளார் அந்த நபர்.

இதனிடையே, கஸ்டம் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக அந்தப் பெண்ணிற்கு போன் வந்துள்ளது. ‘உங்களுக்கு பார்சல் ஒன்று வந்துள்ளது. அதற்கு டாக்ஸ் ஆக 10000 ரூபாய் செலுத்த வேண்டும்’ என போனில் அதிகாரி போல் பேசிய நபர் கூறியிருக்கிறார். அந்த பெண்ணும் 10 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்திருக்கிறார். இருப்பினும், நேரில் வந்துதான் பார்சலை பெற முடியும் என்று கூறியிருக்கிறார் போனில் பேசிய நபர். இதனையடுத்து, அந்தப் பெண் திருவனந்தபுரம் விமான நிலையம் அருகே சென்றிருக்கிறார்.

அப்போது, அதிகாரி போல் நடித்த அந்த நபர், ‘பார்சலில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான டாலர்கள் இருக்கிறது’ இதனை தர முடியாது. இதனை கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு தனியாக பணம் கட்ட வெண்டும் என்று கூறியிருக்கிறார். உடனடியாக தனது ஃபேஸ்புக் நண்பருக்கு போன் செய்து பணம் அனுப்பினீர்களா என்று அந்தப் பெண் கேட்க, அதற்கு ‘ஆம், உனக்கு தொழிலில் ஏதோ கஷ்டம் என சொன்னாய் அல்லவா அதற்காகத்தான் அனுப்பியிருக்கிறேன். அவர்கள் சொல்லும் பணத்தை கட்டி வாங்கிக் கொள்’ என்று கூறியிருக்கிறார். அந்தப் பெண் 10 லட்சம் ரூபாயை கட்டியிருக்கிறார். இப்படியே இன்னும் சில முறைகள் கட்டியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு சந்தேகம் வரவே, தனக்கு எதுவும் வேண்டாம், தான் கட்டிய பணம் அனைத்தையும் கொடுத்துவிடுங்கள் என கேட்டிருக்கிறார். கட்டிய பணத்தை எல்லாம் திருப்பித் தர வேண்டும் என்றால் அதற்கு பணம் கட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அவர் பணம் கட்டம் மொத்தம் ரூ21.5 லட்சத்தை அந்தப் பெண் இழந்து இருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்து விரக்தி அடைந்து அவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

டெல்லியில் இருந்த 2 நைஜூரியா நபர்களை கைது செய்த குமரி போலீசார்!

இந்நிலையில் இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செல் போன் சிக்னல் மூலம் குற்றவாளிகள் டெல்லியில் இருப்பது தெரியவந்தது. ஆய்வாளர் வசந்தி அவர்கள் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் டெல்லிக்கு சென்றனர். இவ்வழக்ககில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பாஸ்கல் பங்கோரா (36), மார்டின் டபேரி (24) ஆகியோரை டெல்லி மாநிலம் துவாரகா மாவட்டத்தில் வைத்து குமரி மாவட்ட போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் காவல்துறை
நாகர்கோவில் காவல்துறைPT

பின்னர் குற்றவாளிகளை தமிழகத்திற்கு அழைத்து வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர் மோசடியில் ஈடுபட்டுள்ள இவர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்திய 22 மொபைல் போன்கள், 26 சிம் கார்டுகள் மற்றும் 16 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்த பின் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com