ஜாமினில் வந்த தொழிலதிபர் தலைமறைவு: தாய்லாந்து பெண் பிரதமர் அலுவலகத்தில் புகார்

ஜாமினில் வந்த தொழிலதிபர் தலைமறைவு: தாய்லாந்து பெண் பிரதமர் அலுவலகத்தில் புகார்

ஜாமினில் வந்த தொழிலதிபர் தலைமறைவு: தாய்லாந்து பெண் பிரதமர் அலுவலகத்தில் புகார்
Published on

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக கூறப்படும் விவகாரத்தில்,  தாய்லாந்து பெண், பிரதமர் அலுவலகத்தில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மீது மீண்டும் புகார் அளித்துள்ளார். 

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மே மாதம் பிரதமர் அலுவலகத்துக்கு புகார் ஒன்று தெரிவித்திருந்தார். அதில் தன்னை சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருமணம் செய்து ஏமாற்றியதாகவும், அதற்கு உறுதுணையாக அவரது நண்பர்கள் இருந்ததாகவும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்திருந்தார்.

இந்த புகார் சென்னை கமிஷ்னர் அலுவலகத்திற்கு அனுப்பபட்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதை விசாரித்தனர். இதையடுத்து புகாரில் தெரிவிக்கப்பட்ட தொழிலதிபர்களான சூளையைச் சேர்ந்த மனோஜ் ஜெயின் மற்றும் புரசைவாக்கத்தைச் சேர்ந்த விகாஸ் கோத்தாரியை மத்திய குற்றப்பிரிவின் பெண்களுக்கெதிரான குற்ற விசாரணை பிரிவு போலிசார் நேரில் அழைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் சென்னை தொழிலதிபர் மனோஜ் ஜெயின் என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பேங்காக்கில் பப் ஒன்றில் தாய்லாந்து நாட்டு பெண்ணை சந்தித்ததாகவும், அப்போது அவர் குளிர்பானத்தில் மயக்கமருந்தை கலந்து கொடுத்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து அவரது நண்பர்கள் சந்தோஷ் மற்றும் விகாஸ் கோத்தாரியுடன் பேங்காக்கில் பதிவு திருமணம் செய்துகொண்டார். பதிவு திருமணத்தில் மனோஜ் ஜெயின் தனது நண்பர் சந்தோஷை கணவர் என கையெழுத்திடவைத்து ஏமாற்றியது தெரியவந்தது.

இதனிடையே மனோஜ் ஜெயின் மூலம் அந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மனோஜ் ஜெயினின் நண்பர் கோத்தாரியும் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு பெண்களுக்கெதிரான குற்ற விசாரணை பிரிவு போலிசார் தொழிலதிபர்கள் மனோஜ் ஜெயின் மற்றும் விகாஸ் கோத்தாரியை கடந்த மே மாதம் 10 ஆம் தேதி கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சந்தோஷ்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் மனோஜ் ஜெயின் மற்றும் விகாஸ் கோத்தாரி ஆகியோர் கடந்த ஜூன் மாதம் ஜாமின் பெற்றனர். இதையடுத்து மனோஜ் ஜெயின், தாய்லாந்து பெண் மற்றும் அவரது குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யுமாறு எழும்பூர் நீதிமன்றம் கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டது.

டிஎன்ஏ பரிசோதனைக்காக தாய்லாந்து பெண் அவரது குழந்தையுடன் சென்னை வரவழைக்கப்பட்டார். இதனிடையே ஜாமினில் வெளிவந்த மனோஜ் ஜெயின் மற்றும் விகாஸ் கோத்தாரி ஆகியோர் தலைமறைவாகிவிட்டதாகவும் ஆகையால் டிஎன்ஏ பரிசோதனை தற்போது செய்ய இயலாது என மத்திய குற்றப் பிரிவு போலீசார் தாய்லாந்து பெண்ணிடம் தெரிவித்தனர். இதில் அதிர்ச்சியடைந்த தாய்லாந்து பெண் மீண்டும் பிரதமருக்கு இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com