சென்னைச் சிறுமிக்கு சிகிச்சை தர மருத்துவர் குழு
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சென்னை சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை வழங்குவதற்காக 6 பேர் கொண்ட மருத்துவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தமிழகம் முழுவதுமே அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் பற்றி தாய் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், லிப்ட் ஆப்ரேட்டர் ரவிக்குமார் உள்ளிட்ட 17 பேரை கைது செய்துள்ளனர். இவர்களை வரும் 31 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான ரவிக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்தே பிற காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன், பிரகாஷ், பிளம்பர் சுரேஷ் மற்றும் வீட்டு வேலைக்காரர் ராஜசேகர், ஆகியோர் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், இவர்களுக்கு உடந்தையாக இருந்த காவலாளிகள் முருகேஷ், பழனி, லிப்ட் ஆப்ரேட்டர்கள் பரமசிவம், பாபு, தீனதயாளன், பிளம்பர்கள் ஜெய்கணேஷ், ராஜா, சூர்யா, எலக்ட்ரீஷியன்கள் ஜெயராமன், உமாபதி, மற்றும் தோட்டவேலை செய்யும் குணசேகர் ஆகியோரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சென்னை சிறுமிக்கு ஆறு பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவை அமைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மனநல மருத்துவர், மனநல ஆலோசகர், இரைப்பை நிபுணர், மகப்பேறு மருத்துவர் உள்ளிட்டோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். குழுவில் உள்ள மருத்துவர்கள் அந்தந்த துறைகளின் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினர் கூறும் இடத்தில் வைத்து சிறுமிக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.