ஓமலூர் அருகே வீட்டில் படுத்திருந்த மூதாட்டியை தாக்கி அவரிடமிருந்த ஏழு சவரன் தங்க நகைகளை கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள ஊ.மாரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலிகடை கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மனைவி லட்சுமி. இவர் அவரது வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் தூங்கி கொண்டிருந்த லட்சுமியை தலையில் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் லட்சுமி தலையில் ரத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரது கழுத்தில் இருந்த தாலிக்கொடி, கழுத்து செயின், கம்மல், தோடு உட்படஏழு சவரன் தங்க நகையை பறித்து சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து லட்சுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை அறிந்த அக்கம்பக்கத்தினர் சத்தம் போட்டனர். இதையடுத்து ஓடிவந்த உறவினர்கள் தலையில் அடிபட்டு கிடந்த லட்சுமியை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இங்கே முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக லட்சுமியை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் அவர் பரிதாமாக உயிரிழந்தார்.
இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ள மர்ம நபர்கள் யார், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஓமலூரில் வழிப்பறி செய்த கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓமலூர் வட்டார பகுதிகளில் தொடந்து கொள்ளை சம்பவம் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கொலை செய்து நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க ஓமலூர் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.