மனைவி மற்றும் கைக்குழந்தையை எரித்துக்கொன்ற கணவன் கைது
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மனைவியையும், கைக்குழந்தையும் தீயில் எரிந்து உயிரிழந்ததாக நாடகமாடிய கணவன், அவர்களைக் கொன்றதாக தற்போது வாக்குமூலம் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கிராமச்சாவடி தெருவில் வசித்துவருபவர் சரவணன். மாற்றுதிறனாளி பட்டதாரியான சரவணனுக்கும் கனகாவுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு இவரது இல்லத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சரவண்னின் கூச்சலையடுத்து ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர். தீயில் சிக்கிய அவரது மனைவி கனகா மற்றும் கைக்குழந்தையை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.ஆனால் அவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழ்ந்தனர். சரவணனுக்கும் லேசான தீக்காயம் இருந்ததால் அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு எதாவது கோணத்தில் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரித்தனர்.
இந்நிலையில் சரவணன் காவல்துறையிடம் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அவர் அளித்த வாக்குமூலத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றதாக சரவணன் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்