குற்றம்
இன்ஸ்டாவில் பெண்களின் ஆபாசப் படங்களை வெளியிடப் போவதாக மிரட்டல் - இளைஞர் கைது
இன்ஸ்டாவில் பெண்களின் ஆபாசப் படங்களை வெளியிடப் போவதாக மிரட்டல் - இளைஞர் கைது
பெண்களின் ஆபாசப் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடப் போவதாகக் கூறி மிரட்டி வந்த பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு விழிப்புணர்வு அதிகரித்துள்ள அளவுக்கு குற்றச்சம்பவங்களும் பெருகியுள்ளன என்கிறது ஒரு புள்ளிவிவரம். இந்த வலைத்தளங்கள் கட்டற்ற சுதந்திரத்தைத் தருவதால் பல விபரீத விஷயங்கள் நடந்தேறி வருகின்றன. எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது என நினைத்து சிலர் தவறான நடத்தைகளில் தைரியமாக நடத்துவது வாடிக்கையாகி உள்ளது.
இந்நிலையில், பெண்களின் ஆபாசப் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாகக் கூறி மிரட்டி வந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புதுமடத்தைச் சேர்ந்த சிவக்குமார். இவருக்கு 23 வயது ஆகிறது. இவர் இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகளை ஆரம்பித்து அதில் பெண்களைக் குறி வைத்து சீண்டல் விஷயங்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
அப்படி பழகிய பெண்களிடம் புகைப்படங்களைப் பகிரக் கூறி வந்துள்ளார். விபரீதம் அறியாமல் சில பெண்கள் இவருக்குப் புகைப்படங்களை அனுப்பியதாகத் தெரிகிறது. அவ்வாறு அனுப்பிய பெண்களின் ஆபாசப் படங்களைக் காட்டி மிரட்டியுள்ளார். பணம் கொடுத்தால் தன்னிடம் இருக்கும் படங்களை அழித்துவிடுவதாகக் கூறி மிரட்டியுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் வெளியிட்டுள்ள 94899 19722 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் உச்சிப்புளி போலீசார் சிவக்குமாரைக் கைது செய்து மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.