சென்னையில் இறந்து போன மூதாட்டியின் தங்க நகைகளை நூதன முறையில் திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அரும்பாக்கம் எம்எம்எடிஏ காலனியைச் சேர்ந்தவர் லதா. இவரது தந்தை ஸ்ரீராமலு காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இறந்து விட்டார். தாயார் குப்பா பாய் (81). இவர்களது மகள் லதா தான் தாய் குப்பா பாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 30-ம்தேதி குப்பா பாய் வயது முதிர்வு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுனர் லதாவிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் போதிய பணம் லதாவிடம் இல்லாத காரணத்தால் பணம் இல்லை என்று ஓட்டுனரிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் அங்கு காக்கி பேண்ட் அணிந்து கொண்டு சாதரண உடையில் வந்த ஒருவர் லதாவிடம், தான் போலீஸ்காரர் ராஜேஷ் என்றும் என்எஸ்கே நகரைச் சேர்ந்தவர் என்றும் கூறி விட்டு உதவி செய்கிறேன் என்றார். பின் ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் பேரம் பேசி உடலை கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார் ராஜேஷ். மேலும் அவரும் உடன் சென்றார்.பின் வீட்டில் குப்பா பாய் உடலை அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டபோது ராஜேஷ் லதாவிடம் தாயாரின் தங்க நகைகளை கழற்றி தலைக்கு மேலே வையுங்கள் என்று கூறியுள்ளார். இதனை நம்பி அவரும் தாயாரின் உடலில் இருந்த தங்க நகைகளையும்,பணத்தையும் வைத்தார். அப்போது பால் எடுத்து வர லதா சமையலறைக்குள் சென்ற போது ராஜேஷ் தங்க நகைகள், பணத்தை எடுத்து கொண்டு ஓடி விட்டார்.
திரும்பி வந்து பார்த்தபோது தான் தங்க நகைகளை அவர் திருடிச் சென்றிருப்பது லதாவுக்கு புரிந்தது. இதனையெடுத்து தனது சகோதரி விஜயலட்சுமியிடம் நடந்ததை கூறினார். இதைத் தொடர்ந்து லதா அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் நகைகளை திருடிய நபர் தப்பி ஓடும் காட்சி பதிவாகி இருந்ததை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் யார் என்பதும் குறித்தும் திருடனுடைய அடையாளங்களை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிணத்திடமிருந்து தங்க நகைகளை திருடிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.