சினிமா பாணியில் தொழிலதிபர் கடத்தல்..!

சினிமா பாணியில் தொழிலதிபர் கடத்தல்..!
சினிமா பாணியில் தொழிலதிபர் கடத்தல்..!

காஞ்சிபுரத்தில் 50 லட்சம் ரூபாய் கேட்டு சினிமா பாணியில் தொழிலதிபரை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் பிரபல பல் பொருள் அங்காடியான காந்தி சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் அப்துல் ரகுமான். இவர் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு தனது இருசக்கர வாகனத்தில் அருகிலுள்ள ஓரிக்கை திருவேங்கட நகரில் உள்ள தன் இல்லத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஆம்னி கார் ஒன்று அந்த நகர் பகுதியில் இருக்கக்கூடிய பிரதானமான காந்தி சாலையில் இருசக்கர வாகனத்தை முட்டி கீழே தள்ளிவிட்டு அப்துல் ரஹ்மானை கடத்திச் சென்றனர்.

அப்துல் ரகுமான் கடத்தப்பட்ட விவரத்தை அவருடைய மகன் பப்பு என்பவருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்த கடத்தல்காரர்கள், அப்துல் ரகுமானை விடுவிக்க உடனடியாக 50 லட்சம் ரூபாய் வேண்டும் என மிரட்டி உள்ளனர். பதறிப்போன அப்துல் ரகுமானின் மகன் பப்பு காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளரிடம் தகவல் கொடுத்துள்ளார். காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி கடத்தல்காரர்கள் தொலைபேசி வாயிலாக பேசும்பொழுது உடனடியாக பேச்சுவார்த்தை துண்டிக்காமல் தொடர்ந்து பேசுங்கள் என அறிவித்து உள்ளார். அதுபோல கடத்தல்காரர்களிடம் பப்பு தொடர்ச்சியாக பேசியுள்ளார். இதனால் கடத்தல்காரர்கள் உடைய செல்போன் டவர் ரேஞ்ச் மூலம் கடத்தல்காரர்கள் தற்போது எந்த ஊரில் இருக்கிறார்கள் என்பது காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. 

கடத்தல்காரர்கள் நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளை பயன்படுத்தாமல் கிராம உட்புற சாலைகளை மட்டுமே பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதனால் காஞ்சிபுரம் காவல்துறையினர் கடத்தல்காரர்கள் செல்லும் வழியில் இருக்கக்கூடிய அனைத்து காவல் நிலையங்களிலும் ரேடியோ மூலம் தகவல் அனுப்பினர்.இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பிரம்மதேசம் பகுதியில் கடத்தல்காரர்களை காவல்துறையினர் சுற்றிவளைத்தனர்.  காவல்துறையினர்  சுற்றிவளைத்தை உணர்ந்த கடத்தல்காரர்கள் கிராம பகுதியில் உள்ள வயல்வெளி பகுதிக்குள் அப்துல் ரகுமான் இறக்கிவிட்டு சர்வ சாதாரணமாக போலீஸார் அமைத்திருந்த தாற்காலிக வாகன பரிசோதனை சாவடியை கடந்து சென்றுவிட்டனர். அப்துல் ரகுமான் கிராம பகுதியில் ஒரு வீட்டின் கதவைத் தட்டி தங்கியிருப்பவர் மூலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து பிறகு காவல்துறையினர் அவரை மீட்டனர். சில மாதங்களுக்கு முன்பு இதே மாதிரியான சம்பவம் மதுராந்தகத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com