சக மாணவிகள் கிண்டலால் தூக்கிட்டு கொண்ட சிலம்ப வீராங்கனை
கோவில்பட்டி அருகே தனியார் கல்லூரியில் சக மாணவியர்கள் கிண்டல் செய்ததால், மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறையை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிவேல். இவரது மகள் திவ்யா(21). இவர் கோவில்பட்டியிலுள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு இளங்கலை படித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு மாநில அளவில் நடந்த சிலம்பு போட்டியில் தங்க பதக்கம் வென்றார். இதே போல் மாநிலத்தில் நடந்த சிலம்பம் தொடர்பான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 2-ம் தேதி சக வகுப்பு மாணவியர்கள், இந்த ஆண்டு சிலம்பு போட்டியில் எப்படி தங்கப்பதக்கம் பெற போகிறாய் எனக் கிண்டல் செய்ததாக கூறி, திவ்யா தனது தந்தை பழனிவேலிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக அவர் கல்லூரி பேராசிரியையிடம் புகார் தெரிவித்துள்ளார். பேராசிரியை கண்டிப்பதாக கூறிய நிலையில் அந்த மாணவியர்கள் மீண்டும் திவ்யாவை கிண்டல் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திவ்யா நேற்று காலை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த அவரது தாய் பேச்சியம்மாள், உறவினர்கள் உதவியுடன் திவ்யா உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனை சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கெனவே உரியிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஏழயிரம்பண்ணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து திவ்யாவின் தந்தை பழனிவேல் கூறும்போது, “நாங்கள் எழுதப் படிக்க தெரியாதவர்கள். எங்கள் குடும்பத்தில் முதலில் எழுதப் படிக்க கற்றுக்கொண்டது எனது மகள்தான். எனது மகள் மாநில சிலம்பம் போட்டியில் வென்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும், நடனம், பேச்சு போன்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளார். திறமையுள்ள எனது மகள் முன்னேறிவிடக்கூடாது என அவரது வகுப்பு மாணவியர்கள் சிலர் ராகிங் செய்துள்ளனர். இதுகுறித்து கல்லூரி பேராசிரியரிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. இதனால் எனது மகளை இழந்துள்ளேன். இதற்கு போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.