அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் மணிக்கட்டை இழந்த குழந்தை! -நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் மணிக்கட்டை இழந்த குழந்தை! -நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் மணிக்கட்டை இழந்த குழந்தை! -நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோவில்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் கவனக்குறைவால் மணிக்கட்டு பகுதியை இழந்த குழந்தைக்கு இழப்பீடாக 15 லட்சம் ரூபாயை வழங்கக் கோரிய வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனை முதல்வர் ஆகியோர்a= பதிலளிக்க  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இதுகுறித்த மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " கடந்த 2021 அக்டோபர் 27ல் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்ட எனது 3 வயது மகள் சுபலட்சுமியை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். அவரது வலது கை மணிக்கட்டு பகுதியில் IV கருவி மூலமாக மருந்து மற்றும் குளுக்கோசை செலுத்தினர். அந்தக் கருவி முறையாக பொருத்தப்படாததால் கையில் வலியும் வீக்கமும் தொடர்ந்து நிறமாற்றமும் ஏற்பட்டது.

பின்னர் சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் தவறான முறையில் IV கருவி செலுத்தியதாகவும், அது முறையாக கவனிக்கப்படாததால் முழுவதும் ரத்த ஓட்டம் இல்லாமல் அழுகிவிட்டதாகவும் மணிக்கட்டு வரை உள்ள பகுதியை அகற்றவில்லையெனில் கை முழுவதும் பாதிப்பு பரவிவிடும் என குறிப்பிட்டனர்.

இதனைத்தொடர்ந்து குழந்தையின் உடல் நிலை ஆரோக்கியம் கருதி எனது மூன்று வயது குழந்தையின் மணிக்கட்டு வரை உள்ள பகுதியை அகற்றி விட்டனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியப் போக்கின் காரணமாகவே எனது குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தவறான சிகிச்சை அளித்ததற்கு இழப்பீடாக 15 லட்சம் ரூபாய் வழங்கவும், அதனை கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்களிடமிருந்து வசூலிக்கவும் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே மருத்துவர்களின் கவனக்குறைவால் மணிக்கட்டு பகுதியை இழந்த எனது குழந்தைக்கு இழப்பீடாக 15 லட்சம் ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் வழக்கு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி சுகாதார சேவை இணை இயக்குனர், தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் முதல்வர் மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 8 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com