நூதன முறையில் பைக் திருட்டு - சிசிடிவி கேமிராவில் சிக்கிய நபர்
சென்னையில் நூதன முறையில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த அப்துல் அப்ரீன் நான்கரை லட்சம் ரூபாய்க்கு வாங்கிய, விலை உயர்ந்த பைக்கை விற்பதாக இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்து ஒருவர் அப்துல்லுக்கு அலைபேசியில் விலை கேட்டுள்ளார். இதையடுத்து அந்த நபர் ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு அப்துல்லை வரச் சொல்லி உள்ளார். அவரும் அங்கு வந்துள்ளார். அந்த நபர் ஆட்டோவில் வந்து இறங்கியதும் அப்துல்லிடம் பேசி பைக்கின் ஆர்சி புத்தகம், மற்ற ஆவணங்களை வாங்கி படித்துவிட்டு சோதனை ஓட்டத்திற்காக பைக்கை வாங்கி ஓட்டி உள்ளார்.
பைக்கின் பின்னால் அப்துல் அமர்ந்து சென்றார். ராயபுரம் மேம்பாலத்தில் சென்றதும் அந்த நபர் அப்துல்லை கீழே இறக்கி விட்டி பைக்கோடு பறந்து விட்டார். இதனைதொடர்ந்து அதிர்ச்சியடைந்த அப்துல் ஏழுகிணறு போலீசில் புகார் அளித்துள்தார். அப்துல் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், திருட்டு ஆசாமி வந்த ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த மோசடி நபர் மயிலாப்பூரில் ஆட்டோ ஏறியதாகவும், தன்னிடம் செல்போன் இல்லை என்று கூறி ஆட்டோ ஓட்டுனரின் செல்போனில் தான் பேசியுள்ளது தெரிய வந்துள்ளது. விலை உயர்ந்த பைக்கை ஒன்றை தான் வாங்கப் போவதாகவும் நீ உதவி செய்தால் ரூ. 2 ஆயிரம் கமிஷன் கிடைக்கும் என்று கூறி ஆட்டோ ஓட்டுனரை நம்ப வைத்து மோசடி நபர் அழைத்து வந்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஏழுகிணறு போலீசார் அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மயிலாப்பூரில் இருந்து ஸ்டேன்லி அரசு மருத்துவமனை வரை சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதில் அந்த மோசடி நபர் மயிலாப்பூரில் ஆட்டோ ஏறிவதும், ஸ்டேன்லி அரசு மருத்துவமனை அருகே இறங்குவதுமான காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதனை வைத்து போலீசார் மோசடி நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.