\
35 வயது பெண் மீது காதல் வயப்பட்ட 65 வயது முதியவர்; காதலை ஏற்காததால் கொளுத்தப்பட்ட வீடு

35 வயது பெண் மீது காதல் வயப்பட்ட 65 வயது முதியவர்; காதலை ஏற்காததால் கொளுத்தப்பட்ட வீடு

35 வயது பெண் மீது காதல் வயப்பட்ட 65 வயது முதியவர்; காதலை ஏற்காததால் கொளுத்தப்பட்ட வீடு
Published on
ஒருதலைக்காதல் விபரீதத்தால் பெண்ணின் வீட்டை தீயிட்டு கொளுத்திய 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை வேளச்சேரியை சேர்ந்த அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது கணவருக்கு கை உடைந்து வீட்டில் ஓய்வு எடுத்து வருவதால் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அவர், வீட்டின் அருகே இரண்டு மாதங்களாக காய்கறி, பழங்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வாழ்க்கையை ஓட்டி வந்தார்.
இவர் தினந்தோறும் காய்கறி பழங்களை வாங்க கிண்டியை சேர்ந்த முருகன் என்பவரது சரக்கு வாகனத்தில் செல்வது வழக்கம். இந்த நிலையில்தான் 65 வயதான முருகனுக்கு 35 வயதான அனிதா மீது காதல் ஏற்பட்டுள்ளது. காதல் வலையில் அனிதாவை சிக்க வைக்க பல்வேறு யுக்திகளை கையாண்ட முதியவருக்கு மிஞ்சியது என்னவோ ஏமாற்றம் மட்டுமே.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, குடும்பமே முக்கியம் என கருதிய அனிதா, முருகனுக்கு பயந்து காய்கறி, பழக்கடை போடுவதையே இரண்டு வாரங்களாக நிறுத்தி விட்டார். இதனால் இரண்டு வாரங்களாக முருகன், அனிதாவை பார்க்க முடியாமல் 'தவித்து' வந்துள்ளார். இரண்டு வாரங்கள் பார்க்க முடியாததால் அனிதாவின் வீட்டிற்கே சென்று பார்த்துவிட, சென்றுள்ளார் முருகன். ஆனால் வீட்டில் அனிதா இல்லாததால், ஆத்திரமடைந்த முருகன் அனிதா தங்கியிருந்த வீட்டிற்கு தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். தீயை அணைக்க முயன்ற வீட்டின் உரிமையாளருக்கு வலது தோள்பட்டையில் தீக்காயம் ஏற்பட்டது.
முருகன் தொல்லையிலிருந்து தப்பிக்க அனிதா, தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டின் உரிமையாளர் அனிதாவை தொடர்பு கொண்டு உங்கள் வீடு எரிந்து கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வருவதற்குள் வீடு முழுவதும் எரிந்து உள்ளே இருந்த பொருட்கள் எல்லாம் எரிந்து சேதமாயின.
இது குறித்து அனிதா வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் முருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com