‘யாருமே உதவிக்கு வரல’ திருடனை விரட்டி விரட்டி வெளுத்த சிறுவன்!

‘யாருமே உதவிக்கு வரல’ திருடனை விரட்டி விரட்டி வெளுத்த சிறுவன்!

‘யாருமே உதவிக்கு வரல’ திருடனை விரட்டி விரட்டி வெளுத்த சிறுவன்!
Published on

அண்ணாநகரில் திருடன் ஒருவனை, சிறுவன் ஒருவர் ஒரு கிலோ மீட்டர் வரை விரட்டிச் சென்று பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.

சென்னை, அண்ணாநகரில் உள்ள டீ ப்ளாக்கில், டாக்டர் அமுதா (50) கிளினிக் நடத்தி வருகிறார். இவரது கிளினிக்கிற்கு நேற்றிரவு இளைஞர் ஒருவர் வந்து, மருத்துவ ஆலோசனைகள் குறித்து கேட்டுள்ளார். அத்துடன் அமுதாவிடம், ‘நீங்கள் குழந்தைகள் சிறப்பு மருத்துவரா, பெண்களுக்கான சிறப்பு மருத்துவரா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார். இரவு கிளினிக்கை மூடும் நேரம் என்பதால், ஊழியர்கள் யாரும் இன்றி அமுதா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

இதை நோட்டமிட்டுக்கொண்ட அந்த இளைஞர், அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து அந்த இளைஞர் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வந்து, தனியாக இருந்த அமுதாவை மிரட்டியுள்ளார். ‘சத்தம் போட்டால் கொன்று விடுவேன்’ என்று கூறிவிட்டு, அமுதாவின் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்கச்சங்கிலியை அந்தத் திருடன் (இளைஞர்) பறித்துக்கொண்டு ஓடியுள்ளார்.

‘திருடன் திருடன்’ என்று அமுதா அலற, சத்தம் கேட்டு எதிரே உள்ள கடை ஒன்றில் இருந்து சிறுவன் ஒருவர் ஓடிவந்துள்ளார். சூர்யா (17) என்ற அந்த சிறுவன், தனது சகோதரரின் கடைக்கு நேரம் கிடைக்கும் போது வந்து செல்வார். அதுபோல தான் இந்த முறையும் வந்திருந்தார். சூர்யா ஓடி வந்து பார்த்தபோது, திருடன் சுவரை ஏறிக்குதித்து ஓடியுள்ளான். அதைக்கண்டதும் திருடன் யாராவது பிடியுங்கள் என்று கத்திக்கொண்டே, விரட்டத் தொடங்கியுள்ளார் சூர்யா. சந்து, தெரு, சாலை என திருடனை விடாது விரட்டிச் சென்றுள்ளார். இந்த ஓட்டம் ஒரு கிலோ மீட்டர் வரை தொடர்ந்துள்ளது. ஓடும் வழி எங்கும் திருடன், திருடன் பிடியுங்கள் என்று கத்தியும் சிறுவனுக்கு, வேடிக்கை பார்த்த மக்கள் யாரும் உதவ முன்வரவில்லை. இறுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று, திருடனை பாய்ந்து பிடித்துள்ளார் சூர்யா. 

பிடித்தவுடன் திருடன் சூர்யாவை தாக்க முயன்றுள்ளார். ஆனால் அச்சம் கொள்ளதாக சூர்யா, திருடனை எதிர்த்துத் தாக்கியுள்ளார். விரட்டி விரட்டி வெளுத்துள்ளார். சூர்யாவின் அடியை தாங்க முடியாத திருடன், நிலை குலைந்துள்ளான். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் திருடனைப் பிடித்து அவனிடம் இருந்த 10 சவரன் சங்கிலியை மீட்டனர். அத்துடன் திருடனின் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். சிறுவனுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய சூர்யா, “நான் ஓடிவந்து பார்த்த போது அந்த டாக்டர் அலறிக்கொண்டிருந்தார். அவர் என் பார்வைக்கு, என் அம்மா மாதிரி தெரிந்தார். என் அம்மாவின் சங்கிலியை யாராவது பறித்துக்கொண்டு ஓடினால், நான் விடுவேனா? அந்த திருடன் கத்தி போன்ற ஏதேனும் ஆயுதம் வைத்திருப்பானா என்று கூட சிந்திக்காமல், அவன் என்னை விடப்பெரியவன் என்றும் பயப்படமால் அவனை விரட்டினேன். நான் திருடன், திருடன் என்று கத்திக்கொண்டே ஓடியும், யாருமே உதவிக்கு வரல” என்று கூறினார்.

(தகவல்கள் : சுப்ரமணியன், செய்தியாளர், புதிய தலைமுறை)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com