
மதுரை வாகன சோதனையில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதை பறிமுதல் செய்து, ஆறு பேரை கைது செய்துள்ளனர் போலீசார்.
அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை, கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து மதுரைக்கு லாரிகள் மூலமாக கடத்திவந்துள்ளனர் சிலர். முன்னதாக இவர்களின் கடத்தல் பற்றி மதுரை தல்லாகுளம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அதிகுந்த கண்ணன் தலைமையிலான தனிப்படையினர், ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சரக்கு வாகனத்தில் இருந்து 3 வாகனங்களுக்கு சிலர் வெள்ளை நிற சாக்கு மூட்டைகளை மாற்றிக் கொண்டிருந்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு, அரசால் தடை செய்யப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான 830 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து குட்கா கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காசிராமன், தர்மபுரியைச் சேர்ந்த விக்ரம், தயாநிதி, சிவகங்கையைச் சேர்ந்த கதிரவன், வெள்ளைச்சாமி, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஹரிஸ்பாபு, பெங்களூரைச் சேர்ந்த கைலாஸ்குமார் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், 6 பேரை கைது செய்தனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 சரக்கு வாகனங்கள், 7 செல்போன்கள், 30 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றையும் தல்லாகுளம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த தல்லாகுளம் காவல்துறை உதவி ஆய்வாளர் அதிகுந்த கண்ணன் தலைமையிலான தனிப்படையினரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயார் பாராட்டினார்.