“சுடுதண்ணீர் வச்சி தரமாட்டியா?” - 2வது மனைவியை கொலை செய்த 80 வயது முதியவர்
சங்கரன்கோவில் அருகே சுடுதண்ணீர் வைத்து தர மறுத்த 2-வது மனைவியை தூங்கிக் கொண்டிருக்கும்போது கோடாலியால் வெட்டி கொலை செய்த 80 வயது முதியவரை போலீசார் கைதுசெய்தனர்.
தென்காசி மாவட்டம் பந்தப்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி(80). இவருக்கு ஆவுடையம்மாள் என்ற முதல் மனைவி இருக்கும்போதே கடம்பன்குளத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி(52) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு கடந்த மூன்றரை ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், உடல்நலம் குன்றிய நிலையில் பொன்னுச்சாமி தனக்கு பணிவிடை செய்யச் சொல்லி சீதாலட்சுமியிடம் கூறி வந்துள்ளார். தனக்கு சொத்து எழுதித்தருமாறு பொன்னுச்சாமியிடம் சீதாலட்சுமி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், குளிப்பதற்கு சுடுதண்ணீர் வைத்து கொடுக்குமாறு பொன்னுசாமி கேட்டுள்ளார். அதற்கு சீதாலட்சுமி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொன்னுச்சாமி நேற்று இரவு தூங்கிக்கொண்டிருந்த சீதாலட்சுமியை கோடாறியால் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். காலையில் வெகுநேரமாகியும் சீதாலட்சுமி வெளியே வராததால் பக்கத்து வீட்டினர் சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், தலைமறைவாக இருந்த பொன்னுச்சாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.