கன்னியாகுமரி : பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட 8 மாத பெண் குழந்தை
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த நரிக்குறவர் தம்பதியரின் 8-மாத பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை வள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நரிக்குறவர்களான முத்துராஜா-புஷ்பவல்லி தம்பதியர். இவர்கள் நேற்று குளச்சல் பகுதியில் தேன் மற்றும் பாசி மாலை விற்பனைக்காக சென்றுள்ளனர். இரவு நேரமானதால் குளச்சல் பேருந்து நிலையத்தில் தங்களது 8-மாத பெண் குழந்தை துர்காவள்ளியுடன் தூங்கியுள்ளனர் முத்துராஜா- புஷ்பவல்லி தம்பதியர். இந்நிலையில், தூங்கிக்கொண்டிருந்த அந்த 8 மாத குழந்தையை யாரோ கடத்திச் சென்றுள்ளனர்.
குழந்தை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குளச்சல் பேருந்து நிலையம் மற்றும் முக்கிய பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரிக்க முற்பட்ட போது எந்த சி.சி.டி.வி கேமராக்களும் மின் இணைப்பு இன்றி உபயோகத்தில் இல்லாதது தெரிய வரவே விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தனியார் கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.