குற்றம்
மனைவியை கொடுமைப்படுத்திய கணவர்: சுத்தியலால் தாக்கி கொலை செய்த மாமியார்
மனைவியை கொடுமைப்படுத்திய கணவர்: சுத்தியலால் தாக்கி கொலை செய்த மாமியார்
மகளை துன்புறுத்திய மருமகனை சுத்தியலால் தாக்கி கொலை செய்த மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை வடலா பகுதியில் வசித்து வருபவர் சாந்தி பால். 70 வயது மூதாட்டியான இவருக்கு ஒரு மகள் உள்ளார். இதற்கிடையே பல ஆண்டுகளுக்கு முன், 57 வயதான பிமால் கன்னா என்பவருடன் சாந்தி பாலுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக தங்கி வந்துள்ளனர். அப்போது பிமால் கன்னாவுக்கு சாந்தி பாலின் மகள் மீது காதல் ஆசை ஏற்பட்டது. இதையடுத்து சாந்தி பாலின் மகளை பிமால் கன்னா திருமணம் செய்து கொண்டார்.
இந்தநிலையில் பிமால் கன்னா தனது மனைவியை அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதனால் மகள் படும் துயரத்தை தாங்க முடியாமல் சாந்தி பால், மருமகனான பிமால் கன்னா மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். கடந்த 16-ம் தேதி வீட்டிற்கு வந்த பிமால் கன்னாவிடம் இது தொடர்பாக வாக்குவாதம் செய்தார். இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சாந்தி பால், வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து பிமால் கன்னாவின் தலையில் பலமாக தாக்கினார். இதில், படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து பிமால் கன்னா தவறி கீழே விழுந்துவிட்டதாகக் கூறி அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார் சாந்தி பால். ஆனால் பிமால் கன்னா கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்திருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்து காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதற்கிடையில் சிகிச்சைப் பலனின்றி பிமால் கன்னா உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, சாந்தி பால் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.