வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமி - பாலியல் வன்கொடுமை செய்த வளையல் வியாபாரி
திருவாரூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச்சென்று வளையல் வியாபாரி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 7 வயது சிறுமி தனது வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் குழந்தையை காணவில்லை என பெற்றோர்களும் ஊர் மக்களும் தேடியுள்ளனர்.
இந்நிலையில், வடகண்டம் பகுதியைச் சேர்ந்த வளையல் வியாபாரியான கதிரேசன் (45) அந்த பகுதியில் வளையல் விற்பனை செய்வதற்காக வந்தது தெரியவந்தது. வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை வீட்டின் அருகாமையில் தூக்கிச்சென்று அவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு குழந்தையை விட்டுச் சென்றுள்ளார். இதனை சிறுமி தனது வீட்டிற்கு வந்து நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி உள்ளார்.
அதனையடுத்து பெற்றோர்களும் ஊர் மக்களும் வளையல் வியாபாரியை தேடிப்பிடித்து தாக்கி நன்னிலம் காவல்துறையில் ஒப்படைத்தனர். அதனையடுத்து நன்னிலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கதிரேசனை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளும் சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.