’சதுரங்க வேட்டை பாணியில் எம்.எல்.எம் நடத்தி பல கோடிகள் வசூல் வேட்டை’ தந்தை, மகன் கைது

’சதுரங்க வேட்டை பாணியில் எம்.எல்.எம் நடத்தி பல கோடிகள் வசூல் வேட்டை’ தந்தை, மகன் கைது
’சதுரங்க வேட்டை பாணியில் எம்.எல்.எம் நடத்தி பல கோடிகள் வசூல் வேட்டை’ தந்தை, மகன் கைது
Published on

கோவையில் 60 கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட எம்.எல்.எம் நிறுவனர் மற்றும் அவரது மகன் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ஐந்து பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கோவை பங்கஜா மில்ஸ் அருகில் உள்ள கிருஷ்ணசாமி நகர் பகுதியில் கிரீன் கிரஸ்ட் இன்வெஸ்ட்மெண்ட் என்ற எம்.எல்.எம் கம்பெனி இயங்கி வருகிறது. இதற்கு முன் இந்த நிறுவனம் திருச்சி சாலை அரசு மருத்துவமனை எதிரில் சித்தி விநாயகா டிரேடிங் என்ற பெயரில் இயங்கி வந்துள்ளது.
இந்நிலையில் இதன் உரிமையாளர்களான மணிகண்டன் மற்றும் அவரது மகன் சஞ்சய் குமார் ஆகியோர் தங்களது நிறுவன ஆட்கள் மூலம், பணம் முதலீடு செய்தால் தினமும் நூற்றுக்கு 0.5 சதவீத வட்டி தருவதாக கூறியதை நம்பி ஏராளமானோர் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி உள்ளனர்.

நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களுடன் இருந்த புகைபடங்களை காண்பித்து விளம்பரங்கள் செய்துள்ளனர். தினமும் 0.5 சதவீதம் தருவதாக கூறியவர் முதலில் அதனை வாடிக்கையாளர் வங்கி கணக்கில் வரவு வைத்ததாகவும், கடந்த மே மாதம் முதல் வங்கி கணக்கில் பணம் வராத காரணத்தால் முதலீட்டாளர்கள் கேட்டபோது, காலம் தாழ்த்தியதுடன் பணம் செலுத்தியவர்களை அடியாட்கள் கொண்டு மிரட்டியதாக பாதிக்கபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து எம்.எல்.எம் உரிமையாளர் இல்லத்தை 50க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டனர். கோவையில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோரும் தமிழகம் முழுவதும் எட்டாயிரத்துக்கு மேற்பட்டோரும் பணம் செலுத்தி உள்ளதாக, பணம் செலுத்திய பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து முதலீடு செய்தவர்கள் சார்பில் பொருளாதார குற்ற பிரிவில் புகார் அளிக்கபட்டதை தொடர்ந்து மணிகண்டன் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 60 கோடி ரூபாய் வரை இவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இவர்கள் மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த நிறுவனத்தில் மணிகண்டனின் மனைவி பத்மாவதி, மகள் சரண்யா, சீனிவாசன், கார்த்திகேயன் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்துள்ளனர். இவர்களையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com