சென்னையில் பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையடித்த 6 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, பாடி சீனிவாசாநகரைச் சேர்ந்தவர் செல்வம்(32). இவர் கடந்த 29 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். மீண்டும் கடந்த 13 ஆம் தேதி சென்னை திரும்பிவந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சியுற்றார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 சவரன் தங்க நகைகள், 19 லட்சம் பணம் மற்றும் 2 ஐபோன்கள் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து செல்வம் கொரட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில் கல்லூரி மாணவர்களான பெசண்ட் நகரைச் சேர்ந்த குமரவேல்(23), தினேஷ்குமார்(19), ராகுல்டேவிட்(20), அரவிந்த்(20), நித்தியானந்தம்(21), ஹரீஷ்குமார்(19) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 16.5 சவரன் தங்க நகைகள், 13 லட்சம் பணம், 2 ஐபோன்கள் மற்றும் 4 இருச்சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் குற்றவாளி குமரவேல், புகார் அளித்த செல்வத்தின் மைத்துனர் என்பதும் செல்வம் வீட்டில் பணம் வைத்துவிட்டு ஊருக்கு செல்வது தெரிந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 6 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.