ராமநாதபுரம் : தனியாக வசிக்கும் பெண்களை படம் பிடித்து பணம் பறித்த 6 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டில் தனியே வசிக்கும் பெண்களைக் செல்போனில் படம் பிடித்து மிரட்டி, பணம் பறித்து வந்த 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர், பரமக்குடி, சத்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில், கணவர் வெளிநாட்டில் பணியாற்றும் நிலையில் தனியே வசிக்கும் பெண்களை நோட்டமிட்ட இந்தக் கும்பல், அவர்களுடன் சாமர்த்தியமாகப் பேசிப் பழகியுள்ளனர். பெண்களுடன் இருந்தபோது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து, அதைக்காட்டி மிரட்டி நகை, பணம் பறித்து வந்துள்ளனர்.
அந்தப் பணத்தைக் கொண்டு சொகுசு காரில் வலம் வந்த அவர்கள், மது, கஞ்சா என போதையில் மிதந்துள்ளனர். மேலும், போகலூர், பரமக்குடி அருகே உள்ள வனப்பகுதிகளில் முயல், மயில் போன்றவற்றையையும் வேட்டையாடி சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
போதை தலைக்கேறும்போது, தங்களிடம் சிக்கியுள்ள பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு பல பெண்களிடம் பல லட்சம் ரூபாய் பணம், நகைகளை இந்தக் கும்பல் பறித்துள்ளது. இவர்களிடம் சிக்கிக் கொண்டு மீள முடியாத பெண்களில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காப்பாற்றி விசாரித்த உறவினர் ஒருவர், இந்தக் கும்பல் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண்ணில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து முகம்மது சீதக்காதி, தனசேகரன், விஷ்ணு, செழியன், சேதுபாண்டி, அரவிந்த், காளிதாஸ் ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது சத்திரக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.