பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசியல் பிரமுகர் உட்பட 5 பேர் கைது

பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசியல் பிரமுகர் உட்பட 5 பேர் கைது
பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசியல் பிரமுகர் உட்பட 5 பேர் கைது

பரமக்குடியில் பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக மறத்தமிழர் சேனை அமைப்பின் நிறுவனர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

பரமக்குடியை சேர்ந்த மாணவி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவி கடந்த ஒரு மாதங்களாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர்கள் அவரிடம் கேட்டபோது, தனக்கு பள்ளிக்குச் செல்ல பிடிக்கவில்லை எனக் கூறியதோடு, வீட்டின் அருகே வசிக்கும் கயல்விழி (45) மற்றும் உமா (34) ஆகியோர் தன்னை ஆண்களிடம் அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகார் மனு கொடுத்தனர். மனுவை பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பிய எஸ்.பி தங்கத்துரை புகார் குறித்து முழு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுதா தலைமையிலான போலீசார் மாணவியை அழைத்து ரகசிய விசாரணை மேற்கொண்டனர். விசாரனையில் தன்னை கடத்தி கட்டாயப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாக திடுக்கிடும் தகவலை கூறினார்.

மேலும் மறத்தமிழர் சேனை அமைப்பின் நிறுவனர் புதுமலர் பிரபாகரன், பரமக்குடியின் பிரபல நிறுவனமான ஜி.எஸ் லேண்ட் ப்ரோமோட்டர் நிறுவனத்தின் தலைவரும், பரமக்குடி நகர் அதிமுக அவைத் தலைவரும், பரமக்குடி நகர் மன்ற உறுப்பினருமான சிகாமணி, களஞ்சியம் ரெடிமேட் உரிமையாளர் ராஜா முகமது ஆகியோர் கடந்த 26-12-22 முதல் 21-2-2023 வரை பார்த்திபனூர் அருகே உள்ள தங்கும் விடுதியில் தொடர்ந்து பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பரமக்குடி டி.எஸ்.பி காந்தி தலைமையிலான போலீசார், சிகாமணி, புதுமலர் பிரபாகரன் மற்றும் ராஜா முகமது ஆகியோரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதேபோல், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய அன்னலட்சுமி என்ற உமா மற்றும் கயல்விழி ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஐந்து பேரையும் போக்சோவில் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை குண்டர் சட்டத்தில் பிணையில் வெளிவர முடியாத வகையில் கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் இன்னும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால் இந்த வழக்கை சிபிஐ விசாரனைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என இப்பகுதி மகளிர் அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com