'5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, 9 சொகுசு கார்கள்' - கே.சி.வீரமணி வீட்டிலிருந்து பறிமுதல்
பொறுப்பிலிருந்த 5 ஆண்டுகளில், வருமானத்திற்கு அதிகமாக 654 சதவிகிதம் அளவுக்கு சொத்துகளை சேர்த்திருப்பதாக கூறி, அவர் வீட்டிலிருந்து 5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, 9 சொகுசு கார்கள் உள்ளிட்ட பல விலை மதிப்புமிக்க பொருட்கள் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி வரிசையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு ஆளாகியிருக்கிறார், முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக ரூ.28,70,00,000 மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை. இது அவரின் வருமானத்தை விட 654 விழுக்காடு அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.
அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கே.சி.வீரமணி தனது பெயரிலும், அதனது தாயாரின் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கியதாகவும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, தனது உறவினர்களின் பெயரில் சொத்துக்களை வாங்கி பின் தனது பெயருக்கு அதை மாற்றம் செய்ததாகவும், அதன் மதிப்பை குறைத்து பத்திரப்பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஓசூரில் 100 ஏக்கர் நிலத்தை ஆண்டுக்கு ஏக்கருக்கு ஒரு ரூபாய் என்ற அடிப்படையில் குத்தகைக்கு எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதில் 15 கோடி ரூபாய் மதிப்பில் நட்சத்திர ஓட்டல்கள் கட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள வீரமணியின் வீடு மட்டுமின்றி சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 28 இடங்களில் சோதனை அதிரடி சோதனையில் இறங்கியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.
சென்னை சாந்தோமில் இருக்கும் கே.சி.வீரமணியின் வீடு, அவருக்கு சொந்தமான தங்கும் விடுதிகள், கல்லூரி, மண்டபம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை தொடர்ந்து வருகிறது. இதனிடையே கே.சி வீரமணியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த தொழிலதிபர் ராம ஆஞ்சனேயலுவிற்கு சொந்தமான சூளைமேடு வீட்டுக்கு சீல் வைத்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.
இதுவரையில் 5 கணினிகள், சொத்து ஆவணங்கள், ரூ.34 லட்சம் பணம், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள் கே.சி.வீரமணி வீட்டில் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும்; உடன் சுமார் 5 கிலோ தங்க நகைகள் (623 சவரன் தங்க நகை), 47 கிராம் வைர நகைகள், 7 கிலோ வெள்ளிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கே.சி.வீரமணி வீட்டின் வளாகத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான மணல் குவித்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பெங்களூரு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை ஆகிய இடங்களில் வீரமணிக்கு சொந்தமான இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.