சென்னை: வாகன சோதனையில் சிக்கிய 5 கிலோ கஞ்சா – விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
கடந்த 22ம் தேதி அம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா தரகர்களின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கள்ளிகுப்பம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி விசாரித்தனர். அப்போது காரில் இருந்த மூன்று பேர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை காருடன் காவல் நிலையம் அழைத்துச்சென்று சோதனை செய்தபோது அவர்களிடம் மூன்று கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து நடத்திய விசாரணையில் அவர்கள் திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த மதன் (43), அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பாபு (39) மற்றும் கங்காராம் (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா, 4 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் அவர்கள் பயணித்த கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து மூவரிடமும் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
இவர்கள் மூவரை சேர்த்து மொத்தம் 7 பேர் ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதோடு கஞ்சாவை கடல் வழி மார்க்கமாக பைபர் படகு மூலம் இலங்கைக்கு கடத்த திட்டம் தீட்டியதும் அம்பலமானது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை விரைந்த தனிப்படை காவல்துறையினர் அங்கு ராயபுரத்தை சேர்ந்த முகமது ஆரிஸ் (45), சீதாராம் கோத்தாரா (43), புதுக்கோட்டையை சேர்ந்த ஆரோக்கியா அஜின் (25) மற்றும் ஜீவா (24) ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இவர்கள் நான்கு பேரிடம் இருந்து மேலும் 2 கிலோ கஞ்சா மற்றும் 3.5 லட்சம் ரொக்க பணம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். பின்னர் இவர்கள் ஏழு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.