நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற புதுமாப்பிள்ளை படுகொலை - 24 மணி நேரத்தில் 5 பேர் கைது

நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற புதுமாப்பிள்ளை படுகொலை - 24 மணி நேரத்தில் 5 பேர் கைது

நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற புதுமாப்பிள்ளை படுகொலை - 24 மணி நேரத்தில் 5 பேர் கைது

திண்டுக்கல்லில் நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற புதுமாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 5 பேரை போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். 

திண்டுக்கல் அனுமந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் பிரபாகரன் (26). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் தென்றல் என்ற பெண்ணும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணமாகியிருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் உள்ள ஏர்போர்ட் நகர் பகுதியில் வசித்துவரும் நண்பன் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக நள்ளிரவு பிரபாகரன், கார்த்தி, குணசேகரன் ஆகிய 3 நண்பர்கள் சென்றிருந்தனர். அப்பொழுது சம்பவ இடத்திற்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம கும்பல் பிரபாகரனை குறிவைத்து சரமாரியாக வெட்டி சென்றுள்ளது. இதைத் தடுக்க முயன்ற கார்த்திக் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதையறிந்த மர்ம கும்பல், அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. படுகாயம் அடைந்த 2 பேரையும் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நண்பர்கள் ஆட்டோவில் அழைத்து வந்துள்ளனர். மருத்துவமனையில் பிரபாகரனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த கார்த்திக்கிற்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் ஏர்போர்ட் நகர் பகுதியில் பதுங்கியிருந்த, ஏற்கெனவே கொலை வழக்கு நிலுவையிலுள்ள ஜம்புளியம்பட்டியைச் சேர்ந்த பசுங்கிளி மகன் ராஜ்குமார்(19), ஏர்போர்ட் நகரைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் ராஜேஸ்வரன்(20), பெரிய பள்ளபட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஸ்ரீதர்(21), பெரிய பள்ளபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் ரஞ்சித்(21), ஜம்புளியம்பட்டியை சேர்ந்த செல்வம் மகன் கரண்குமார்(21) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் ரூபேஷ் குமார் மீனா செய்தியாளரிடம் பேசுகையில், ‘’பிறந்தநாள் விழாவின்போது குடிபோதையில் இருந்த நண்பர்களுக்கும் மற்றும் பிரபல ரவுடி பசுங்கிளி மகன் ராஜ்குமாருக்கும் இடையே ஏற்கெனவே இருந்த முன்விரோதம் காரணமாக மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திரமடைந்த ராஜ்குமார் தரப்பினர் படுகொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் நடைபெற்று 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் 5 பேர் மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்’’ என தெரிவித்தார்.

மேலும் இந்த கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் சன்மானங்கள் வழங்கி டிஐஜி ரூபேஷ்குமார் மீனா பாராட்டு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com