காரில் மதுபானங்களை கடத்தி வந்த காவலர், நிருபர் உட்பட 5 பேர் கைது

காரில் மதுபானங்களை கடத்தி வந்த காவலர், நிருபர் உட்பட 5 பேர் கைது
காரில் மதுபானங்களை கடத்தி வந்த காவலர், நிருபர் உட்பட 5 பேர் கைது

சென்னையில் போலீஸ் எனப் பெயரிடப்பட்ட காரில் மதுபானங்களை கடத்தி வந்த காவலர், நிருபர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். உளவுப்பிரிவு காவலர் உதவியோடு ஆந்திரா மாநிலத்தில் இருந்து 228 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்தது அம்பலமானது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கானது அமலில் இருந்து வருகிறது. இதனால் மதுபான கடை உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கிறது.

இதனை பயன்படுத்தி கொண்ட சிலர் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்று வருகின்றனர். இதனை தடுப்பதற்காக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புளியந்தோப்பு உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு மதுபானங்களை சட்டவிரோதமாக காரில் கடத்தி செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தனிப்படை போலீசார் மூலக்கடை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது போலீஸ் என பலகை வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று அவ்வழியாக வந்தது. அப்போது அந்த காரை போலீசார் வழி மறித்து சோதனை செய்தனர். அதில் 228 மதுபான பாட்டில்கள் இருந்தது.

இதனையடுத்து காரில் வந்த ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலரான கொடுங்கையூரை சேர்ந்த பிரபாகரன் (48), உள்ளாட்சி முரசு நாளிதழின் நிருபர் ராஜ்குமார்(28), திருவேற்காடுவை சேர்ந்த கார்த்திக்(39), கொடுங்கையூரை சேர்ந்த மோகன்குமார், வெங்கடேசன்(55) என்பது தெரியவந்தது. 

இவர்கள் ஆந்திர மாநிலம் ராமாபுரத்திலிருந்து மதுபானங்களை வாங்கி வந்ததும் தெரியவந்தது. மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் பிரபாகரனிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது எம்.கே.பி நகர் சரகத்தில் உளவுப்பிரிவு காவலராக இருக்கக்கூடிய தேவக்குமார் என்பவரின் உதவியோடு மதுபானங்களை கடத்தி வந்தது தெரியவந்தது. 

இதனால் உயரதிகாரிகள் உளவுப்பிரிவு காவலர் தேவக்குமாரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com