பெரம்பலூர்: போதைப்பொருள் கடத்த முயற்சி; பாஜக பிரமுகர் உள்பட 5 பேர் கைது
திருச்சியில், நான்கரை லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை விற்பனை செய்வதற்கு காத்திருந்ததாக பாரதிய ஜனதா பிரமுகர் உள்ளிட்ட 5 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் அடைக்கலராஜ் உள்ளிட்ட நான்கு பேர் மதுரையைச் சேர்ந்த ஒரு கும்பலிடம் அபினை விற்பதற்காக திருச்சியில் காத்திருப்பதாக போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள ஒரு உணவகம் எதிரே அபின் கைமாறவிருப்பதாக வந்த தகவலின்பேரில், போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் காமராஜ் தலைமையிலான காவலர்கள் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது மதுரையைச் சேர்ந்தவர்கள் வராததால், அடைக்கலராஜ் உள்ளிட்ட நான்கு பேரையும் அவர்களுக்கு உதவிய திருச்சியைச் சேர்ந்த ஒருவரையும் காவலர்கள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நான்கரை லட்சம் ரூபாய் மதிப்பிலான அபினும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.