இலங்கை டூ தனுஷ்கோடி: கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கம் சிக்கியது - 5 பேர் கைது!

இலங்கையில் இருந்து கடத்தி வந்து கடலில் வீசப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியுள்ளது. இதில் இரண்டு பைபர் படகுகளுடன் சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
accused
accusedpt desk

தனுஷ்கோடி கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் கடல் அட்டை, கஞ்சா, சமையல் மஞ்சள், வலி நிவாரணி, பீடி இலை உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு தங்க கட்டிகள் கடத்தப்பட்டு வருவது வாடிக்கை நிகழ்வாக உள்ளது.

smuggled gold
smuggled goldpt desk

கடந்த செவ்வாய்க்கிழமை காலை இலங்கையில் இருந்து தங்கத்தை கடத்தி வருவதாக கிடைத்த தகவலையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பதிவு எண் இல்லாத பைபர் படகு ஒன்று சந்தேகத்துக்கிடமாக மணலி தீவு அருகே நின்று கொண்டிருந்தது. அப்படகில் இருந்தோர், இந்திய கடலோர காவல் படையினரை கண்டதும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். மேலும் படகில் இருந்த இரண்டு பார்சல்களை அதில் இருந்தவர்கள் கடலில் வீசியுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், பைபர் படகை மடக்கிப் பிடித்து படகில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் படகில் இருந்த வேதாளையைச் சேர்ந்த இருவர் மற்றும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஒருவர் என மூவரை இந்திய கடலோர காவல் படையினர், மண்டபம் முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிப்பட்டவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வேதாளையைச் சேர்ந்த மேலும் இருவரை கைது செய்து, அவர்களது வீட்டில் இருந்து சுமார் 21 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

smuggled gold
smuggled goldpt desk

இதையடுத்து கடலில் வீசப்பட்ட தங்கத்தை கடலுக்கு அடியில் சென்று தேடுவதற்காக இந்திய கடலோர காவல் படை, ஸ்கூபா டைவிங் வீரர்கள், கடலில் முத்து எடுக்கும் கடல் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர் நவீன சாதனங்களின் உதவியுடன் புறப்பட்டுச் சென்றனர். இதையடுத்து மணலி தீவுக்கும் சிங்கிலி தீவுக்கும் இடையே கடலுக்கு அடியில் வீசப்பட்ட தங்கக் கட்டிகள் கொண்ட பார்சல் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட பார்சலில் சுமார் 10 கிலோ தங்கம் இருப்பதாக மத்திய வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை கிராமத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் இந்திய கடலோர காவல் படை இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் பிடிப்பட்டதாக சொல்லப்படுகிறது. கைப்பற்றப்பட்ட தங்கம் தற்போது மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

smuggled gold
smuggled goldpt desk

மேலும் பாதுகாப்புத் துறையினரால் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்கள் ஐந்து பேரையும் மத்திய புலனாய்வு வருவாய்த் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com