47 பவுன் நகை கொள்ளை... சினிமா பாணியில் தப்ப முயன்ற இன்ஸ்டா பிரபலம்! சிக்கியது எப்படி?
செய்தியாளர் : வெற்றிச்செல்வி
ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த மூதாட்டியிடம் 47 பவுன் தங்க நகைகளை கோவையை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரிடம் சிக்காமல் இருக்க அவர் போட்ட வித விதமான பிளான்கள் ஒவ்வொன்றும் விசாரணையில் அம்பலமாகியுள்ளன.
சென்னை திருவனந்தபுரம் விரைவு ரயிலில் கடந்த நவம்பர் 3-ம் தேதி குமாரி என்ற 66 வயது மூதாட்டி பயணம் செய்துள்ளார். தனது பேத்தியின் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த 47 பவுன் தங்க நகைகளைப் பையில் வைத்து, படுக்கைக்கு அடியில் வைத்திருந்தார். ரயில் பாலக்காடு நிலையத்தை அடைந்தபோது, அந்தப் பை மாயமானது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி ரயில்வே காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.
இதையடுத்து ரயில்வே காவல்துறையும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இணைந்து தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கினர். ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்த 600-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, முகக்கவசம் அணிந்த நபர் ஒருவரின் நடமாட்டம் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சைபர் க்ரைம் காவல்துறையினரின் உதவியுடன் அவரைப் பின்தொடர்ந்த காவல்துறையினர், கோவையில் பதுங்கியிருந்த அவரைக் கைது செய்தனர். விசாரணையில், அவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த 28 வயதான பாலமுருகன் என்பது தெரியவந்தது.
குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள பாலமுருகன், வீடியோ எடிட்டராகவும் பணியாற்றி வந்துள்ளார். சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோவர்சைக் கொண்டுள்ள இவர், வெளியுலகில் ஆடம்பரமாக வாழ்ந்ததுடன், சொந்த ஊரில் தன்னை ஆன்மிகவாதியாகவும் நல்லவராகவும் காட்டிக்கொண்டு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், 47 பவுன் நகைகளைத் திருடிய பிறகு அவர் நடந்து கொண்ட விதம்தான் காவல்துறையினரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பாலக்காட்டில் ரயிலில் இருந்து இறங்கியவர், ஆட்டோவில் பேருந்து நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து அடுத்தடுத்து ஐந்து பேருந்துகளில் மாறி மாறிப் பயணம் செய்துள்ளார். சிசிடிவியில் முகம் பதிவாகாமல் இருக்க முகக்கவசம் அணிந்ததுடன், நெற்றியை கைகளால் மறைத்தும், வழியிலேயே உடைகளை மாற்றியும் தப்ப முயன்றுள்ளார்.
திருடிய நகைகளுடன் சொந்த ஊருக்குச் சென்ற அவர், அங்குள்ள விலைமதிப்பற்ற பரிசுப் பொருட்களை வழங்கி தீபாவளியை விமரிசையாகக் கொண்டாடியுள்ளார்.
பிடிபட்ட பாலமுருகனிடம் இருந்து 36.42 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே மதுரையில் ஓடும் ரயிலில் கையடக்க மடிக்கணினியைத் திருடிய வழக்கும் அவர் மீது உள்ளது. இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, மீதமுள்ள நகைகள் எங்கே உள்ளன என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

