‘மலிவு விலையில் தங்கக்கட்டிகள்’ அரசு அதிகாரிகள் எனக்கூறி ரூ.40L மோசடி.. திருச்சியில் சதுரங்க வேட்டை!
திருச்சியைச் சேர்ந்த பிரவீன்(38) என்பவர் பிரபல தனியார் நகை கடையில் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “வருமானவரித்துறை அதிகாரி மற்றும் ஜிஎஸ்டி அதிகாரி எனக்கூறி இரு நபர்கள் பழக்கமானார்கள். இருவரும் தங்க கட்டிகள் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 40 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டனர்” என புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பூக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த 2021 ஆம் ஆண்டு மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த குரு சம்பத்குமார் என்பவர் பிரவீனிடம் தான் ஜிஎஸ்டி ஆடிட்டர் என கூறி அறிமுகமாகியுள்ளார். குரு சம்பத்குமாரின் அறிமுகத்தின் பேரில் வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறி லட்சுமி நாராயணன் என்பவரும் பின்னர் அறிமுகமாகியுள்ளார்.
அரசு அதிகாரிகள் எனக் கூறிக்கொண்ட இருவரும் தங்களுக்கு மார்க்கெட் விலையில் தங்க பிஸ்கட்டுகள் வியாபாரம் செய்யும் வியாபாரிகளைத் தெரியும் என்றும், குறைவான விலைக்கு தங்க பிஸ்கட்டுகளை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளனர். இதை நம்பிய நகைக்கடை இயக்குநர் பிரவீன், சென்னை பூக்கடை பகுதியில் உள்ள அவரது நிறுவனத்தில் வைத்து ரூபாய் 40 லட்சம் பணத்தை ரொக்கமாக கொடுத்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரூபாய் 40 லட்சத்தை வாங்கிச் சென்ற இருவரும், அதன் பிறகு பிரவீனின் செல்போன் அழைப்பை எடுக்காமல் துண்டித்து வந்துள்ளனர். மேலும், தங்கக் கட்டிகளையும் வாங்கிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதுகுறித்து நேரடியாக சென்று கேட்டபோது இருவரும் கொலை மிரட்டல் விடுத்ததாக பிரவீன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஜிஎஸ்டி ஆடிட்டர் எனக் கூறிய குரு சம்பத்குமார், அதேபோன்று வருமானவரித்துறை அதிகாரி எனக் கூறிய லட்சுமி நாராயணன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் இவர்கள் இருவரும் அரசு அதிகாரிகள் இல்லை என்பதும் மோசடிக்காக இது போன்று அரசு அதிகாரிகளாக தங்களை காட்டிக் கொண்டு பலரிடம் மோசடி செய்வதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது.
போலியாக அரசு எம்பளம் மற்றும் அரசு பதிவெண் கொண்ட காரை பயன்படுத்தி தங்களை அரசு அதிகாரிகள் போல காட்டிக் கொண்டு பலரிடம் இதே பாணியில் மோசடி செய்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இருவரையும் கைது செய்த பூக்கடை போலீசார் எத்தனை நபர்களிடம் மோசடி செய்துள்ளனர்? என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.