`பெட்ரோல் பங்க் வரை லிஃப்ட் கொடுங்க’ என நாடகமாடி கடத்தல் முயற்சி; 4 பேர் கைது

`பெட்ரோல் பங்க் வரை லிஃப்ட் கொடுங்க’ என நாடகமாடி கடத்தல் முயற்சி; 4 பேர் கைது
`பெட்ரோல் பங்க் வரை லிஃப்ட் கொடுங்க’ என நாடகமாடி கடத்தல் முயற்சி; 4 பேர் கைது

சென்னையில் பெட்ரோல் பங்க் வரை அழைத்துச் செல்ல சொல்வது போல் ஏமாற்றி, ஒருவரை கடத்த முற்பட்ட நான்கு பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெரவள்ளூர் ஜிகேஎம் காலனி 26-வது தெருவைச் சேர்ந்தவர் பிரசாந்த். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் கண் மருத்துவமனையில் இன்சூரன்ஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார் இவர். இவர் நேற்று வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது, பெரவள்ளூர் பெரியார் நகர் 19வது தெரு வழியாக பூங்கா ஒன்றின் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பிரசாந்தை நிறுத்தி, தனது வாகனத்தில் பெட்ரோல் இல்லை, சற்று பெட்ரோல் பங்க் வரை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார்.

இதையடுத்து பிரசாந்த் அவரை ஏற்றும் போது பின்னால் கார், 2 பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் பிரசாந்த்தை அடித்து உதைத்து அவரது கைப்பையை பறித்தனர். பிறகு அவரை அடித்து உதைத்து காரில் ஏற்ற முயன்றுள்ளனர். ஆனால் ஏறவில்லை. இதையடுத்து அவரது பைக்கிலேயே உட்கார வைத்து அவரை 2 பேர் கடத்திச்சென்றனர்.

வில்லிவாக்கம் சுரங்கப்பாதை வழியாக பாடி மேம்பாலம் ஏறி அம்பத்தூர் எஸ்டேட் டெலிபோன் எக்சேஞ்ச் அருகே அழைத்துச் செல்லும் போது தான் போக்குவரத்து போலீசாரை பார்த்து வண்டியிலிருந்து குதித்துள்ளார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் பிரசாந்த்தை தாக்கி உள்ளனர். அங்கு சாலையில் ரோந்து பணியில் இருந்த காவலர்கள் 2 பேரை மடக்கிப்பிடித்தனர். பிறகு மீதமுள்ள 2 பேரையும் பிடித்தனர். 4 பேரையும் அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியதில் பெரவள்ளூரில் இருந்து பிரசாந்தை பைக்கிலேயே கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பெரவள்ளூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காரில் வந்த ஒருவர் மட்டும் பிரசாந்தின் கைப்பை உடன் காரில் தப்பி சென்று உள்ளார். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களை அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் வைத்தனர். பெரவள்ளூர் போலீசார் 4 பேரையும் கைது செய்து பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். போலீஸ் விசாரணையில் பிரசாந்த் அவரது பெரியம்மா பானுமதி வீட்டில் வசித்து வருகிறார். இந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு அவரது பெரியப்பா சிவகுமார் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். அப்போது சிவக்குமார் பிரசாந்திடம் 50 லட்சம் ரூபாயை கருப்பு நிற லெதர் பேக்கில் வைத்து கொடுத்துள்ளார். பத்திரமாகக வைத்து கொள்ளும்படியும் கேட்கும் போது தரும்படியும் சிவக்குமார் கூறியுள்ளார்.

இதையடுத்து பிரசாந்த் வீட்டில் படுக்கை அறையில் படுக்கையின் கீழே வைத்து ஆணி அடித்து மூடி வைத்துள்ளார். பணத்தை சிவகுமார் அடிக்கடி வந்து சரிபார்த்து வந்தார். இந்நிலையில் திடீரென பணத்தில் 20 லட்சம் காணவில்லை என்று தெரிந்தது. இது குறித்து பிரசாந்திடம் கேட்டபோது சிவக்குமாருக்கும் அவருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் சிவகுமார் என்பவர் ஆட்களை வைத்து பிரசாந்தை கடத்திச் சென்று பணத்தை கொடுக்குமாறு மிரட்டுவதற்கான செயலில் ஈடுபட்டது தெரிந்தது.

கைதான 4 பேரிடம் நடத்திய விசாரணையில் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ், அம்பத்தூரைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் தொழில் செய்து வரும் வசந்த், தஞ்சாவூரைச் சேர்ந்த பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர் ஆதித்யா, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பழவியாபாரி முகமது அனீஸ் என்பது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com