திருவிழா வீதியில் பெண்களுக்கு நடந்த கொடூரம் - வைரல் வீடியோவால் அதிரடியில் இறங்கிய போலீசார்
மத்தியப் பிரதேச காவல்துறை மார்ச் 11 அன்று அலிராஜ்பூர் மாவட்டத்தில் இரண்டு பழங்குடியின சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு ஆண்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரில் நால்வரும் அடங்குவர்.
மத்திய பிரதேசத்தில் இரண்டு பழங்குடியின சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய 15 பேரில் 4 ஆண்கள்மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் மார்ச் 11ஆம் தேதியன்று நடந்த பகோரியா பண்டிகையின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. திருவிழாவின் போது இரண்டு பெண்களை ஒரு ஆண்கள் கூட்டம் மாறி மாறி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அதன்படி குற்றத்தில் ஈடுபட்ட தார் மற்றும் அலிராஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்தபோதிலும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்காததால் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களை இதுவரை அடையாளம் காணவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நரேந்திர தவார்(25), விஷால் கியாதியா(18), திலிப் வஸ்கேல்(30) மற்றும் முன்னா பீல்(30) ஆகியோர் கைது செய்யப்பட்டு உஜ்ஜைன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என அலிராஜ்பூர் எஸ்.பி மனோஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் சோன்வா பகுதிக்கு உட்பட்ட வால்பூர் கிராமத்தில் நடந்திருக்கிறது. வைரலான அந்த வீடியோவில், இரண்டு பெண்கள் சாலையில் நிற்கின்றனர். பகல் நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் அதிகமிருந்த சாலையில் கும்பலாக வந்த இளைஞர்கள் இரண்டு பெண்களையும் மாறி மாறி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியிருக்கின்றனர். இதை சாலையில் சென்ற பலரும் வீடியோ எடுத்து சமூக ஊடங்களில் வைரலாக்கினர். இதனையடுத்து போலீசார் இதுகுறித்த விசாரணையில் இறங்கி நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.