பூட்டிய வீட்டை நோட்டமிட்டு 38 சவரன் கொள்ளை: ஸ்கெட்ச் போட்டு கைது செய்த போலீசார்

பூட்டிய வீட்டை நோட்டமிட்டு 38 சவரன் கொள்ளை: ஸ்கெட்ச் போட்டு கைது செய்த போலீசார்
பூட்டிய வீட்டை நோட்டமிட்டு 38 சவரன் கொள்ளை: ஸ்கெட்ச் போட்டு கைது செய்த போலீசார்

நிவர் புயல் காரணமாக உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த போது 38 சவரன் தங்க நகை மற்றும் ரூ. 2லட்சம் பணம் கொள்ளையடித்த கொள்ளையர்களை 22 மணி நேரத்துக்குள் போலீசார் கைது செய்தனர்


சென்னை அசோக் நகர் 15வது அவென்யூவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பார்த்தசாரதி (65). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் நிவர் புயல் காரணமாக கனமழை பெய்ததால் கடந்த 24ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சாஸ்திரி நகரில் உள்ள உறவினரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.


இந்த நிலையில் புயல் கரையை கடந்த பின்பு நேற்று காலை வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த ரூ. 2 லட்சம் பணம் மற்றும் 38 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது தெரியவந்தது.


உடனடியாக பார்த்தசாரதி, குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி இல்லாததால், அடுத்தகட்ட நடவடிக்கையில் போலீசார் இறங்கினர்.


குறிப்பாக உறவினர் வீட்டிற்குச் செல்வதை அறிந்த கொள்ளையர்கள் தான் கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்தனர். இதனடிப்படையில் பார்த்தசாரதி வீட்டிற்கு அருகாமையில் உள்ள கே.கே நகர் அம்பேத்கர் குடியிருப்பில் வசிக்கக்கூடிய நபர்கள் மீது சந்தேகம் எழுந்து அங்கு ஏற்கெனவே குற்ற செயல்களில் ஈடுபட்டு கைதானவர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (18), பிரகாஷ்(20), விக்கி என்ற விக்னேஷ் ஆகியோர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை கைது போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பார்த்தசாரதி உறவினர் வீட்டிற்குச் செல்வதை அறிந்து நோட்டமிட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து கொள்ளையடித்த 38 சவரன் தங்க நகைகள் மற்றும் 22 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மீதமுள்ள பணத்தை பறிமுதல் செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 22 மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த குமரன் நகர் குற்றப்பிரிவு போலீசாரை நேரில் அழைத்த சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com