'பெண்ணிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு பேட்டி' - யூடியூப் சேனலைச் சேர்ந்த 3 பேர் கைது
பெண்ணிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு பேட்டி எடுத்ததாக, யூடியூப் சேனல் ஒன்றைச் சேர்ந்த மூவரை சென்னை சாஸ்திரி நகர் போலீசார் கைது செய்தனர்.
சில யூடியூப் சேனல்கள் 'மக்கள் கருத்து' என்ற பெயரில் பொது இடங்களில் மக்களிடம் கேள்வி கேட்டு, அதை வைரல் வீடியோவாக்கி வருகின்றனர். வைரலாக வேண்டும் என்பதற்காக சில கேள்விகள் தரம் தாழ்ந்தும் செல்கிறது. இது தொடர்பாக பலர் இணையத்தில் கண்டனங்களையும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் பெண்ணிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த ஒரு யூடியூப் சேனலைச் சேர்ந்த மூன்று பேரை சாஸ்திரி நகர் போலீசார் கைது செய்தனர்.
Chennai Talk என்ற அந்த யூடியூப் சேனலில், பெண்ணிடம் ஆபாசமாக பேசி எடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து, இந்த வீடியோ தொடர்பாக பெசன்ட் நகரை சேர்ந்த பெண் ஒருவர், 'பொது இடங்களில் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சாஸ்திரி நகர் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.
அதனடிப்படையில் பொது இடத்தில் ஆபாசமாக பேட்டி எடுத்ததாக சென்னை டாக் யூடியூப் சேனலை சேர்ந்த அசென் பாட்ஷா, கேமரா மேன் அஜய் பாபு, உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை சாஸ்திரி நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
<iframe width="912" height="513" src="https://www.youtube.com/embed/rCsTDfjJ1e4" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>