இரவில் தொழிலாளர்களை தாக்கி செல்போன், பணம் பறிப்பு: ஆவடியில் வழிப்பறி கும்பல் அட்டூழியம்

இரவில் தொழிலாளர்களை தாக்கி செல்போன், பணம் பறிப்பு: ஆவடியில் வழிப்பறி கும்பல் அட்டூழியம்
இரவில் தொழிலாளர்களை தாக்கி செல்போன், பணம் பறிப்பு: ஆவடியில் வழிப்பறி கும்பல் அட்டூழியம்

ஆவடி, அம்பத்தூர் பகுதியில் துணிகரம் 3 தொழிலாளிகளை கல்லால் தாக்கி செல்போன், பணம் பறிப்பு - நள்ளிரவில் கைவரிசை கட்டிய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் நடைபெறும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஆவடியை அடுத்த அண்ணனூர், இ.எஸ்.ஐ அண்ணாநகர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ரகுவரன் (30). இவர், கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு ரகுவரன் வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். இவர், அண்ணனூர் ரயில்வே கேட் அருகில் வந்தபோது பைக்கில் வந்த 2பேர் வழிமறித்து உள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் ரகுவரனை சரமாரியாக கல்லால் தாக்கியுள்ளனர்.

பின்பு ரகுவரன் பாக்கெட்டில் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ 3ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்து கொண்டு பைக்கில் தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த ரகுவரன் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதே போல, அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், குமாரசாமி 5வது தெருவை சேர்ந்தவர் பாலாஜி (24). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு வேலை முடிந்து கம்பெனி பேருந்து மூலம் பாடி பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கினார்.

பின்னர், அவர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவர் வீட்டருகே வந்த போது, ஒரே பைக்கில் வந்த 3பேர்கள் பாலாஜியை வழிமறித்து கல்லால் சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்து கொண்டு பைக்கில் தப்பி தலைமறைவானார்கள். இதில், படுகாயமடைந்த பாலாஜி கொரட்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதே போல், அத்திப்பட்டு, ஐ.சி.எப் காலனி, செல்லியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது அன்சாரி (27). இவர் அம்பத்தூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு முகமது அன்சாரி வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது மாரியம்மன் கோவில் தெருவில் வந்த போது இரு பைக்குகளில் வந்த 6பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து உள்ளது. பின்னர், அக்கும்பல் அன்சாரியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது, அவர் பணம் தன்னிடம் இல்லை என கூறியுள்ளார். இதனையடுத்து, ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை சரமாரியாக கல்லால் தாக்கி உள்ளனர்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து பைக்கில் தப்பி தலைமறைவானார்கள். பின்னர், படுகாயமடைந்த முகமது அன்சாரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேற்கண்ட 3வழிப்பறி சம்பவங்கள் குறித்து திருமுல்லைவாயல், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஒரே நாளில் ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் நள்ளிரவில் நடந்த வழிப்பறி சம்பவங்கள் பொதுமக்கள் இடையே பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com