நாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் அதிரடி கைது
தமிழகத்தின் பல பகுதிகளில் வழிப்பறி மற்றும் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்கள் 3 பேர் நாமக்கல் அருகே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளையர்கள் 5 பேர் நாமக்கல் வழியாக தப்பிச் செல்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நகரின் பல பகுதிகளிலும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று அதிகாலை தீரம்பூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் சென்ற ஹரியானா மாநில பதிவெண் கொண்ட காரை போலீசார் தடுத்து நிறுத்த முற்பட்டபோது கார் நிற்காமல் சென்றிருக்கிறது. அதையடுத்து அந்தக் காரைக் காவல்துறையினர் துரத்திச் சென்றபோது பொம்மைக்குட்டை மேடு என்ற இடத்தில் நிறுத்திவிட்டு 3 பேர் தப்பியோடினர்.
அதில் ஒருவர் வீடு ஒன்றின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்தபோது சிக்கினார். சிறிது நேரத்தில், அதே சுங்கச்சாவடி வழியாக வந்த டெல்லி பதிவெண் கொண்ட காரை சுற்றி வளைத்த காவல்துறையினர் அதிலிருந்த 2 கொள்ளையர்களை கைது செய்தனர். மூவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு வழிப்பறி மற்றும் ஏடிஎம் கொள்ளையில் அவர்களுக்கு தொடர்பிருப்பது தெரியவந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தப்பியோடிய 2 கொள்ளையர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்படிருப்பதாகவும் கூறினர்.