\
பண மோசடி வழக்கு: ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 3 தனிப்படை

பண மோசடி வழக்கு: ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 3 தனிப்படை

பண மோசடி வழக்கு: ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 3 தனிப்படை
Published on: 

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைதுசெய்ய 3 தனிப்படைகள் அமைத்தது விருதுநகர் மாவட்ட காவல்துறை.

ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைவாங்கித் தருவதாக ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடரப்பட்டது. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த மாதம் 18ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனைத்தொடர்ந்து முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

பணமோசடி தொடர்பான வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து ராஜேந்திர பாலாஜியை கைதுசெய்ய காவல்துறை தீவிரம் காட்டிவருகிறது.

ஒரு தனிப்படை திருச்சி பகுதியிலும், மற்ற இரு படைகள் விருதுநகர் மாவட்டத்தின் உட்பகுதியிலும் தேடிவருவதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com