இன்ஸ்டா விளம்பரத்தை நம்பி ஏமாந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் - 3 பேரை கைது செய்தது தனிப்படை
சென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி சாந்தி. இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். தனது இரு மகள்களையும் சாந்தி கவனித்து வந்துள்ளார். இவர்களுடைய மூத்த மகள் மகாலட்சுமி (வயது 19), சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். மகாலட்சுமி, இன்ஸ்டாகிராமில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து, ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதில் அவர், ரூ.30,000 வரை பணத்தை கட்டி இழந்துவிட்டதாகத் தெரிகிறது. இதையறிந்த சாந்தி, ‘குடும்பம் கஷ்டத்தில் இருக்கும்போது இப்படி பணத்தை கட்டி இழந்துவிட்டாயே’ என மகளை திட்டியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மகாலட்சுமி, ஆன்லைன் பங்குவர்த்தக நபரை குறுஞ்செய்தி மூலம் மீண்டும் தொடர்பு கொண்டு (இன்ஸ்டாகிராம்) பணத்தை திரும்ப அனுப்ப சொல்லி கேட்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த மாதம் 2-ஆம் தேதி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து முத்தியால்பேட்டை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது காவல்துறைக்கு தெரியவந்தது. உதவி ஆணையர் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்கள் மேற்கு வங்கம் சென்று 14 நாட்கள் தங்கி, சம்பந்தப்பட்ட இன்ஸ்டாகிராம் IP ஐடியை வைத்து விசாரணையை தொடங்கினர். அதன் மூலம் தொலைபேசி எண்களை எடுத்து கவனித்து வந்துள்ளனர்.
அப்போது குற்றவாளிகள் ஸ்விகியில் உணவு ஆர்டர் செய்தது தெரியவந்தது. அதன்பின் டெலிவரி செய்தவரிடம் குற்றவாளிகள் முகவரியை வாங்கி அங்கு சென்றுள்ளனர். இப்படியாக கொல்கத்தாவைச் சேர்ந்த அமானுல்லா கான், முகமது பைசல், முகமது ஆசிப் இக்பால் ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்தனர் தமிழக காவல்துறையினர். பின் அவர்களை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தமிழகத்திற்கு அழைத்துவந்தனர். முதலில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்று பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியது, மோசடி மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய மூன்று பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.
கொல்கத்தாவைச் சேர்ந்த அமானுல்லா கான், முகமது பைசல், முகமது ஆசிப் இக்பால் ஆகிய மூன்று இளைஞர்களை விசாரணை செய்ததில் இன்ஸ்டாகிராம் மூலம் மோசடி செய்வதை ஒப்புகொண்டு உள்ளனர். மேலும், எப்படி இணைய மோசடி செய்து வருகிறார்கள் என்று அவர்களிடம் விசாரித்தபோது, ”ஒவ்வொரு நாளும் இன்ஸ்டாகிராம் மூலம் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, அதில் யார் அவர்களை மீண்டும் தொடர்பு கொள்கிறார்கள் என்று பார்த்து, அவர்களிடம் பேசி இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு அவர்களிடம் உரையாடுவோம். பிறகு ஆசை வார்த்தை கூறி, முதல்கட்டமாக குறைந்த பட்சமாக 700 ரூபாய் செலுத்தினால் 2200 ரூபாய் கிடைக்கும் என்று சொல்வோம். பிறகு கூடுதல் தொகையை கட்டினால் அதற்கு ஏற்ப பணம் தரப்படும் என்று கூறுவோம்.
எங்கள் வார்த்தைகளை நம்பி பணம் போடுவார்கள். பிறகு அதற்கான பணத்தை கொடுக்காமல் இணைப்பை துண்டித்து விடுவோம்” என்று விசாரணையில் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இணையம் மூலம் மோசடி செய்த பணத்தை வைத்து ஐ போன், கிட்டத்தட்ட 5000 ரூபாய் மதிப்புள்ள வாசனை திரவியங்கள், வெளிநாடு சுற்றுலா மற்றும் கேளிக்கை விடுதி என ஆடம்பர வாழ்கையை வாழ்ந்து வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை இணை ஆணையர் ரம்யா பாரதி, "இதுபோல் யாராவது ஆன்லைன் பண மோசடியில் ஈடுபடுவது தெரிந்தால் உடனடியாக 1930 எண்ணுக்கு தொடர்புகொண்டு காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவித்தால் பணத்தை உடனே மீட்கலாம். அதேபோல் தொலைபேசிக்கு வரும் தேவையற்ற லிங்க்-களை கிளிக் செய்ய கூடாது. முகம் அறியாத நபர்களிடம் பேசக்கூடாது. இணைய மோசடி அதிகரித்து வரும் இச்சூழ்நிலையில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்று அவர் கேட்டு கொண்டார்.