மதுரை: திமுக கொடியுடன் வந்த காரில் 2.5 கிலோ திமிங்கல எச்சம் கடத்தல் - 3 பேர் கைது
மதுரையில் திமுக கொடியுடன் வந்த காரில் கடத்திவரப்பட்ட 2.5 கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திமுக முன்னாள் எம்.எல்.ஏவின் உறவினர் உட்பட 3 பேரிடம் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் - சிவகங்கை சாலையில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிறப்பு தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக திமுக கொடியுடன் வந்த கார் ஒன்றை மடக்கி அதனை சோதனையிட்டதில் காரின் உள்ளே 2.5கிலோ திமிங்கல எச்சத்தை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து திமிங்கல எச்சத்தை காரில் கடத்திவந்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் உறவினரான லிங்கவாடியைச் சேர்ந்த அழகு, நந்தம் சீர்வீடு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி, நத்தம் பகுதியைச் சேர்ந்த குமார் ஆகிய 3 பேரையும் மேலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து காரில் கடத்திவரப்பட்ட திமிங்கல எச்சம் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட கார் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து வனத்துறையினரிடம் திமிங்கல எச்சம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் மேலூர் காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கடத்தபட்ட 2.5 கிலோ திமிங்கல எச்சம் சுமார் 2 கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கலாம் என்பதால் இந்த எச்சம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, இதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.