மருத்துவ மேற்படிப்புக்கு இடம்வாங்கி தருவதாக மோசடி - டெல்லியைச் சேர்ந்தவர் கைது
மருத்துவ மேற்படிப்பிற்கு சீட் வாங்கி கொடுப்பதாகக்கூறி 2 கோடியே 22 லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த டெல்லியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் மருத்துவர் கலைவாணி. அவரது பேத்தியை முதுகலை மருத்துவ மேற்படிப்பில் சேர்க்க இடம்வாங்கி தருவதாக 2013ஆம் ஆண்டு ஒரு கும்பல் பணம் வாங்கியுள்ளது. 2 கோடியே 22 லட்சம் வாங்கிக்கொண்டு அந்த கும்பல் தலைமறைவானதால் கலைவாணி 2016ஆம் ஆண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்தி வந்த விசாரணையில், சென்னையைச் சேர்ந்த வெங்கட்ராமன், லாவண்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மோசடிக்கு மூளையாக செயல்பட்ட டெல்லியை சேர்ந்த இப்ராகிம் என்பவரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்னை அழைத்து வந்து சிறையிலடைத்தனர். மேலும் இவ்விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யார் என்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.